மேலும்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க இந்திய மத்திய அரசு கடும் எதிர்ப்பு

rajiv-suspectsமுன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்  தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோருக்கு கருணை காட்டக் கூடாது என்று, உச்சநீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு நேற்றுத் தெரிவித்தது.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், நளினி (முருகனின் மனைவி), ராபர்ட், பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு  உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து,  தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு நேற்று விசாரணை நடத்தியது.

அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த சட்டவாளர் ராகேஷ் திவேதி முன்னிலையாகி,  ஆயுள் தண்டனைக் கைதிகள், தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகு அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

rajiv-suspects

இதையடுத்து, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் முன்னிலையாகி- “இந்த வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவிப்பவர்கள் செய்த குற்றம் சாதாரணமானதல்ல.

இந்த நாட்டின் முன்னாள் பிரதமரை படுகொலை செய்த சம்பவத்தில் வெளிநாட்டு சக்திகளுக்கு துணையாக இருந்ததால் தண்டனை பெற்றவர்கள்.

அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனை என்பது அவர்களின் ஆயுள் முழுவதும் தொடர வேண்டுமே தவிர, இடையில் விடுதலை செய்வதற்காக அல்ல என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட முருகன், சாந்தன் உள்ளிட்ட மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டவாளர் ராம் ஜேத்மலானி-

இந்த வழக்கில் குற்றவாளிகள் செய்த தவறை பற்றி ஆராய இந்த நீதிபதிகள் அமர்வு கூடவில்லை. ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டா? இல்லையா? என்பது பற்றித்தான் இப்போது விசாரிக்க வேண்டும்.

ஏழு கைதிகள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த ஏழு பேரை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்பட்டிருந்தால், மூன்று அல்லது நான்கு நாள்களில் அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பர்.

ஆனால், மத்திய அரசின் மனுவால், அவர்கள் விடுதலையாவதில் மேலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த மனுவே விசாரணைக்கு உகந்தது அல்ல.

இந்த வழக்கில் மத்திய அரசு கருணை காட்டாமல் கடுமையாக நடந்து கொள்கிறது என்றார்.

இதையடுத்து, சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார்-  இந்த வழக்கில் ராஜீவ் காந்தி மட்டுமன்றி மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் தரப்புக்கு நியாயத்தைப் பெற்றுத் தர வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யும் முன்பு மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியம்.

கைதிகள் ஏழு பேரின் கருணை மனுக்களை மாநில ஆளுநரும், குடியரசுத் தலைவரும் நிராகரித்துள்ளனர். அதன் பிறகும் அவர்களில் மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் சிறையாக உச்ச நீதிமன்றம் குறைத்துள்ளது.

இந்த வழக்கில் ஏழு பேரை சிறையில் இருந்து விடுதலை செய்ய கருணை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

நேற்றுக்காலை 11.40 மணிக்கு தொடங்கிய இந்த வழக்கின் வாதங்கள், பிற்பகல் 2.50 மணி வரை தொடர்ந்தது.

இதைத் தொடர்ந்து, தனது வாதத்தை மேலும் தொடர சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் அனுமதி கேட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு, இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *