மேலும்

எஞ்சிய பகுதிகளை விடுவிக்க சிறிலங்கா இராணுவம் மறுப்பு – மகிந்த கொடுத்துள்ள உற்சாகம்

basnayake-palaly (1)வலி.வடக்கில் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கான பாதைகளை விடுவிப்பதற்கும், உறுதியளிக்கப்பட்ட எஞ்சிய காணிகளை விடுவிப்பதற்கும் சிறிலங்கா இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட முதலாவது அதிகாரபூர்வ பயணத்தின் போது, பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க இராணுவத்தின் வசமுள்ள எஞ்சிய காணிகளை விடுவித்தல் மற்றும், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான வீதிகளைத் திறந்து விடுவதில் முக்கியமான முடிவுகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நேற்று இது தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டங்களில், அத்தகைய எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் கடும் எதிர்ப்புக் காரணமாகவே, இந்த நிலை ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

basnayake-palaly (2)basnayake-palaly (3)

முப்படைத் தளபதிகளுடன் நேற்று பலாலிப் படைத்தளத்துக்கு வந்த சிறிலங்கா  பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க,  வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் சிலவற்றை நேரில் சென்று பார்வையிட்டார்.

அத்துடன், விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மூடப்பட்டுள்ள பாதைகளுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பந்தல்களில் அவர் படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தினார்.

இதன்பின்னர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் பலாலி இராணுவத் தலைமையகத்தில் நடத்த உயர்மட்டக் கூட்டத்தில், பாதுகாப்புச் செயலர் , மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் ரஞ்சினி நடராஜபிள்ளை, யாழ்.மாவட்ட அரச அதிபர்,  பிரதேச செயலர்கள் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.

இக்கூட்டத்தில் படையினரால் விடுவிக்கப்பட வேண்டிய பாடசாலைகள்,  வீதிகள் மற்றும் காணிகள் குறித்து  மீள்குடியேற்ற அமைச்சின் செயலர்  எடுத்துக் கூறினார்.basnayake-palaly (4)basnayake-palaly (5)

வல்லை – அராலி விதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 கி.மீ  பகுதி விடுவிக்கப்பட வேண்டும் என்று விடுவிக்கப்பட்ட கோரிக்கை தொடர்பான, சிறிலங்கா இராணுவ தளபதியின் கருத்தை பாதுகாப்புச் செயலர் கோரினார்.

அதற்கு, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, பலாலி விமான நிலையத்தை குறித்த வீதி ஊடறுத்துச் செல்வதால், அதனை விடுவிக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, மாற்றுப்பாதை தொடர்பாக, மீள்குடியேற்ற அமைச்சின் செயலர், கோரிக்கை விடுத்த போது, அதற்கும் இராணுவத் தளபதி மறுத்து விட்டார்.

அத்துடன், தொண்டைமானாறு, பலாலி,  காங்கேசன்துறை, கீரிமலை வரையிலான கரையோர வீதியை விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் சிறிலங்கா இராணுவத் தளபதி நிராகரித்து விட்டார்.

வளலாயில் எஞ்சிய பகுதிகளை விடுவிப்பது குறித்து கேள்வி எழுப்பியபோது, ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் குடியமரவில்லை என்றும், எனவே மேலும்  காணிகள் ஏன் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் குதர்க்கமாக கேள்வி எழுப்பியிருந்தார் சிறிலங்கா இராணுவத் தளபதி.basnayake-palaly (6)basnayake-palaly (7)

மயிலிட்டி துறைமுகத்தை மக்கள் பாவனைக்கு விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையும் அவரால் நிராகரிக்கப்பட்டது.

மயிலிட்டி துறைமுகம் சுனாமியால் பாதிப்படைந்துள்ளதாகவும், அதனால் புதிய துறைமுகத்தை நிர்மாணிக்கலாம் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி பதிலளித்திருக்கிறார்.

சிறிலங்கா இராணுவத் தளபதியின் இறுக்கமான நிலைப்பாடு காரணமாக,   நேற்றைய கூட்டத்தில் காணிகளை விடுவிப்பது தொடர்பான எந்த அறிவித்தலும் வெளியிடப்படவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச களமிறங்கியுள்ளதால், அவர் பிரதமராகப் பதவியேற்றால், தமக்குச் சாதகமான நிலை உருவாகும் என்று இராணுவத் தரப்பில் கருதப்படுவதாகவும், இதனால், ஏற்கனவே விடுவிக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட பகுதிகள், மற்றும் வீதிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா இராணுவத் தரப்பில் தயக்கம் காட்டப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *