மேலும்

குருநாகல தேர்தல் பரப்புரைகளில் போர்வெற்றி உணர்வுக்கு உசுப்பேற்றுகிறார் மகிந்த

mahindaகுருநாகல மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, அங்குள்ள சிறிலங்கா படையினர் மற்றும், முன்னாள் படையினர், உயிரிழந்த படையினரின் குடும்பங்களின் வாக்குகளை இலக்கு வைத்தே பரப்புரைகளை ஆரம்பித்துள்ளார்.

போர் வெற்றிப் பரப்புரையை மேற்கொண்டு இலகுவாக வெற்றி பெறலாம் என்ற அடிப்படையில், சிறிலங்காப் படையினரின் குடும்பங்கள் அதிகம் வசிக்கும் குருநாகல மாவட்டத்தில் போட்டியிட முடிவு செய்த மகிந்த ராஜபக்ச, அங்கு போர் வெற்றிவாதத்தை முன்னிறுத்தியே பரப்புரைகளை மேற்கொண்டுள்ளார்.

நேற்று கல்கமுவவில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், நாட்டிலுள்ள எல்லாப் பகுதிகளுக்கும் நாளாந்தம் சடலங்கள் செல்லும் யுகத்தை தாமே முடிவுக்குக் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

“ போர் நடந்த காலத்தில் குருநாகல மாவட்ட பிள்ளைகள் தான் அதிகளவில் போருக்குச் சென்றனர்.

தோல்வியடையச் செய்ய முடியாதவர்கள் என்று உலகில் முதலிடத்தில்  இருந்த கொலைகார அமைப்பை தோல்வியடையச் செய்ய இந்தக் குருநாகல பிள்ளைகள் மாபெரும் அர்ப்பணிப்பைச் செய்துள்ளனர்.

2005ஆம் ஆண்டு நாட்டைப் பாரமெடுத்த போது இந்தக் குருநாகலவில் மாத்திரமல்ல, முழு நாட்டிலும் நாளாந்தம் எங்களது வீரர்களின் 10, 15 சடலங்கள் வந்து கொண்டிருந்தன.

அவ்வாறானதொரு நாட்டைத் தான் அன்று நாங்கள் பாரமெடுத்தோம். அந்த யுகத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வந்தோம்.

முழு நாட்டிலுள்ள பிள்ளைகளின் முழு வாழ்வையும் நாங்கள் பேணினோம். இதுதான் நான் செய்த தவறா?

இன்று எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற ரணில் விக்ரமசிங்க, இளைஞர்களின் வாழ்க்கையின் பெறுமதியை நன்றாகத் தெரிந்தவரா?

அன்று 1987, 89 கால கட்டங்களில் இளம் உயிர்கள் ஆயிரக்கணக்காக அழிக்கப்பட்டன. இன்று மனித உரிமைகள் தொடர்பாகப் பெரிதாகப் பேசுகின்றனர்.

அதனால் பழைய யுகத்தையும் நன்றாகத் தேடிப்பார்த்து, நாட்டின் எதிர்காலத்தையும் நினைத்து நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *