மேலும்

தமிழ் அரசியல்வாதிகளைக் கொன்ற முதல்தரக் கொலைகாரன் யார்? – கருணாவிடம் ஆதாரங்கள்

karunaதமிழ் அரசியல்வாதிகள் பலரைப் படுகொலை செய்த முதல்தரக் கொலைகாரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்.

இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ள முதல் தர கொலைகாரன் பற்றிய உறுதியான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்தவே இந்த தனிநபருக்கு தனது சுயவிருப்பில் இடமளித்திருக்கிறார்.

இந்த நபர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சந்திரநேரு மற்றும் பேராசிரியர் ரவீந்திரநாத் ஆகியோரின் படுகொலைகளில் நேரடியாகத் தொடர்புடையவர்” என்றும் கருணா தெரிவித்திருக்கிறார்.

எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் குறிப்பிட்ட முதல் தர கொலையாளி யார் என்ற விபரத்தை வெளியிடவில்லை.

அதேவேளை, கருணாவின் முன்னாள் சகாவும், முன்னாள் கிழக்கு முதல்வருமான பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் இந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

அதேவேளை, தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக கருணாவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குறுதி கொடுத்திருந்த போதிலும் அவருக்கு அதில் இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *