மேலும்

எட்டு மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வியடையும் – சுசில் போடும் கணக்கு

susil-premajayanthவரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இலகுவாக வெற்றியைப் பெறும் என்று அதன் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

“அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த 6.2 மில்லியன் மக்களும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாக்களிக்கப் போவதில்லை.

மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்த ஆறு இலட்சம் தமிழ் வாக்குகளும், ஜேவிபியின் ஏழு இலட்சம் வாக்குகளும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடைக்காது.

எனவே, மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்த 6.2 மில்லியன் வாக்குகளில் 1.3 மில்லியன் வாக்குகள் குறைந்து விடும்.

ஆனால், மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்த 5.8  மில்லியன் வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே கிடைக்கும்.

ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலில் நாம் 22 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் வெற்றி பெற்றோம்.

பதுளை, கம்பகா, புத்தளம் ஆகிய மூன்று மாவட்டங்களையும்  குறைந்தளவு வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்தோம்.

ஆனால் இம்முறை அவற்றை மீளக் கைப்பற்ற முடியும் என்று நம்பிக்கை உள்ளது. பொலன்னறுவ மாவட்டத்திலும் நிச்சயமான வெற்றி கிடைக்கும்.

எனவே, 22 தேர்தல் மாவட்டங்களில் 14 மாவட்டங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றினால், 14 போனஸ் ஆசனங்கள் எமக்கு கிடைக்கும்.

யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், கைப்பற்றினால், எஞ்சிய 4 மாவட்டங்களே நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கு உள்ளது.

இந்தப் பின்னணியில்,  113 ஆசனங்களைப் பெற்று எவ்வாறு இவர்களால் ஆட்சி அமைக்கமுடியும்?” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *