மேலும்

வடக்கு, கிழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளின் கட்சித்தாவல்

muslim_politicsநாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், கடந்த ஓரிரு நாட்களில் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் கட்சி தாவியுள்ளனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு வன்னி மாவட்டத்திலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட ஹுனைஸ் பாருக் இம்முறை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

அவர் கடந்த அதிபர் தேர்தலுக்கு முன்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்திருந்தார்.

இந்தநிலையில் இப்போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்திருக்கிறார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அலி சாகிர் மௌலானா, நேற்றுமுன்தினம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டுள்ளதுடன், அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்பட்ட போது, கருணாவைக் காப்பாற்றி கொழும்புக்கு கூட்டிச் சென்ற இவர் ஏற்கனவே ஐதேகவில் இருந்து, மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டவராவார்.

இதற்கிடையே, பொத்துவில் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீத் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபை குழுத் தலைவரான ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் நேற்று அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டனர்.

அதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரசில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த எம்.எஸ்.சுபைர் அந்தக் கட்சியில் இருந்து விலகி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

தேர்தல் காலங்களில் நடக்கும் இந்த கட்சித்தாவும் செயல்களை ‘அரசியல் நோக்கம் கொண்ட வியாபாரம்’ என்று விமர்சித்துள்ள சமூக ஆர்வலரான எஸ்.எல்.எம்.ஹனீபா, கட்சித் தாவுகின்றவர்கள், தாங்கள் மக்களிடமிருந்து தப்புவதற்காக கையாளும் யுக்தியே ‘தலைமைகள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது’ என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *