மேலும்

ராஜபக்சவின் மீள்வருகை – சிறிலங்கா அரசியலில் திடீர் திருப்பம்

mahindaபத்து ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த ராஜபக்ச கடந்த அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இவர் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமையானது சிறிலங்காவின் அரசியலில் திருப்பம் ஒன்று ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.

இவ்வாறு இந்தியாவில் இருந்து வெளியாகும் mydigitalfc.com இணையத்தளத்தில் சுபா சிங் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிசேனவால் தோற்கடிக்கப்பட்டு ஆறு மாதங்களின் பின்னர் மீண்டும் மகிந்த ராஜபக்ச ஆகஸ்ட்டில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியின் தலைவராக போட்டியிடவுள்ளதானது சிறிலங்காவின் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றிலிருந்து இன்னும் ஐந்து வாரங்களில் சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இங்கு அரசியற் சூழல் மீண்டுமொரு தடவை மாற்றமுற்றுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் சிறிலங்காவின் அரசியலில் பாரியதொரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதாவது பத்து ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த ராஜபக்ச கடந்த அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இவர் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமையானது சிறிலங்காவின் அரசியலில் திருப்பம் ஒன்று ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.

கடந்த 26ம் திகதி சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் சிறிசேன அறிவித்திருந்தார். அத்துடன் நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 17 அன்று இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. செப்ரெம்பரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் இதற்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே சிறிலங்காவின் அரசியற் தலைமையின் நோக்காகும்.mangala-unhrc

இந்தவகையிலேயே நாடாளுமன்றத் தேர்தலை அவசர அவசரமாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. செப்ரெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையானது சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்திற்குத் தமது ஆதரவை வழங்கிய சிங்களப் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் அதிருப்தியை உண்டுபண்டும். அத்துடன் சிங்கள சமூகத்தவர்களின் இந்த நிலைப்பாடானது சிறிலங்காவின் உள்விவகாரங்களில் வெளிச்சக்திகளின் தலையீடு இடம்பெறக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்த ராஜபக்சவின் கருத்திற்கு மேலும் பலம் சேர்க்கும்.

சிறிலங்காவின் தற்போதைய அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் நாடாளுமன்றத்தில் அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கான பலமான உந்துதலை வழங்கக் கூடிய நிலையிலில்லை.

விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியானது தற்போது கலைக்கப்பட்ட நாடாளுமன்றில் 225 மொத்த ஆசனங்களில் 40 ஆசனங்களை மட்டுமே கொண்டிருந்தது. ஆனால் ராஜபக்சவின் விசுவாசிகள் இந்த நாடாளுமன்றில் பலமான ஒரு இடத்திலிருந்தனர்.

இதனால் சிறிசேனவால் முன்வைக்கப்படும் எந்தவொரு அரசியற் சீர்திருத்தத்தையும் எதிர்த்து நிற்கக் கூடிய சக்தியை ராஜபக்சவின் விசுவாசிகள் கொண்டிருந்தனர். இவர்கள் தமக்கான பலத்தைப் பயன்படுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்திருந்தனர்.

சிறிசேனவால் தலைமை தாங்கப்படும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ராஜபக்ச போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவின் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் இடம்பெற்ற தேர்தலில் சிறிசேன அதிக வாக்குகளைப் பெற்று ராஜபக்சவைத் தோற்கடித்திருந்தார்.

சிறிசேன, ராஜபக்சவின் நெருங்கிய கூட்டாளியாகவும், ராஜபக்சவின் அரசாங்கத்தில் பிரதான அமைச்சுப் பதவியையும் வகித்திருந்தார். ஆனால் கடந்த அதிபர் தேர்தலில் சிறிசேன பிரதான எதிர்க்கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டு தேர்தலில் களமிறக்கப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி ஒன்றை உருவாக்கியிருந்தன.

இவ்வாறானதொரு அரசியற் பின்னணியின் மூலம் சிறிலங்காவின் அதிபராகிய சிறிசேன தற்போது ராஜபக்சவுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளார்.

SRI LANKA-POLITICS-RAJAPAKSEஅதாவது ராஜபக்சவிற்கு வேட்பாளர் நியமனத்தை வழங்க மறுப்பதன் மூலம் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் சிறிசேன உறுதியாக இருந்தார். இதனாலேயே இவர் தற்போது ராஜபக்சவுக்கு வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

எனினும் ராஜபக்சவைப் புறக்கணித்து சிறிசேனவுடன் கூட்டணி வைத்திருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு சிறிசேனவின் இந்த நடவடிக்கை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராஜபக்சவிற்கு வேட்பாளர் நியமனத்தை வழங்க மறுத்ததன் மூலம் சிறிசேன ஐ.தே.க விசுவாசியாக மாறிவிட்டதாகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செழுமையை மழுங்கடித்து விட்டதாகவும் சிலர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

தென்சிறிலங்காவில் பெரும்பான்மை சமூகத்தவர்கள் ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கின்றனர். நீண்ட காலம் தொடரப்பட்ட யுத்தத்ததைத் தோற்கடித்ததுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் சிங்களவர்கள் ராஜபக்ச மீது தமது ஏகோபித்த ஆதரவை வழங்கி வந்துள்ளனர்.

கடந்த ஜனவரித் தேர்தலில் ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவரை மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வருவதற்காக ராஜபக்சவின் விசுவாசிகள் பல்வேறு ஆர்ப்பாட்டப் பேரணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் ராஜபக்ச, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் போட்டியிடுவதானது அரசியல்வாதிகள் பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘வானவில் கூட்டணி’ என அழைக்கப்படும் எதிரணியின் கூட்டுக்கட்சி ஒன்றின் மூலமே சிறிசேன அதிபர் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கினார். இதன்போது ராஜபக்ச மீண்டும் அரசியலில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட மாட்டாது என வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனாலும் இதனை சிறிசேன மீறிவிட்டதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.

ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் மிகமெதுவாகவே மேற்கொள்ளப்படுகின்றன. ராஜபக்சவின் சகோதரர்களுக்கு எதிரான ஊழல் மோசடிகள் ராஜபக்சவின் ஆதரவு வாக்குகளின் வீழ்ச்சியை ஏற்படுத்தும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

குறிப்பாக தென்சிறிலங்காவைச் சேர்ந்த கிராமியச் சிங்களவர்களின் அதிகளவான வாக்குகளை ராஜபக்ச இழக்க நேரிடலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தான் எவ்வாறான நகர்வை முன்னெடுக்க வேண்டும் என்பதை சிறிசேன அரசாங்கம் மிகக் கவனமாகத் தெரிவு செய்திருந்தது. ஆனால் விசாரணைகளுக்கான காலம் இழுத்தடிக்கப்படுகிறது.

ஐ.தே.க பிரதான தேர்தல் போட்டியாளராக முன்னர் காணப்பட்டது. ஆனால் ராஜபக்ச, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்கின்ற தனியொரு கட்சியின் கீழ் போட்டியிட்டு நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது இடம்பெறவுள்ள தேர்தலில் ராஜபக்ச, பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான வாய்ப்பையோ அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பையோ சிறிசேன வழங்கவில்லை.

சிறிலங்காவின் அரசியல் யாப்பின் பிரகாரம், பிரதமரை நியமிக்கும் அதிகாரத்தை சிறிலங்கா அதிபர் கொண்டுள்ளார். சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் என்பது மிகப் பெரிய அரசியற் கட்சிகள் தமது சொந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் அரசியற் களத்தில் வெளிப்படையாகப் போட்டியிடுவதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர்.

இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் போன்றோர் தெரிவு செய்யப்படுகின்றனர்.modi-mahinda

சிறிலங்காவில் கடந்த ஆறு மாத காலமாகச் செயற்பட்ட சிறிசேன – ரணில் கூட்டு அரசாங்கத்தை இந்தியா வரவேற்றிருந்தது. சிறிலங்காத் தமிழர்களுடன் அரசியல் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துமாறு இந்தியா, ராஜபக்ச மீது அழுத்தம் கொடுத்த போதிலும் அதனை ராஜபக்ச இறுதி வரை நிறைவேற்றவில்லை.

இந்நிலையில் ராஜபக்சவின் தேர்தல் தோல்வியானது இந்தியாவுக்கு சாதகமான ஒரு வாய்ப்பை வழங்கியது. இதனால் சிறிசேன-ரணில் அரசாங்கத்தை இந்தியா வரவேற்றது. இந்தியாவைப் புறக்கணித்த ராஜபக்ச சீனாவைத் தனது நெருங்கிய அரசியல் மற்றும் பொருளாதாரக் கூட்டாளியாக இணைத்துக் கொண்டார்.

அத்துடன் சீன அணுவாயுத கப்பல்கள் சிறிலங்காத் துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கான அனுமதியையும் ராஜபக்ச வழங்கியிருந்தார்.

சிறிசேன அதிபராகப் பதவியேற்றுக் கொண்டதன் பின்னான காலப்பகுதியில் இந்திய-சிறிலங்கா உறவு மீண்டும் நெருக்கமடைந்துள்ளது. கடந்த ஆறு மாத காலப்பகுதியில் சிறிலங்கா அதிபர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பரஸ்பரம் இரு நாடுகளுக்கும் தமது சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியா மற்றும் சீனாவுடன் சிறிசேன அரசாங்கம் ஒரு நடுநிலையான உறவுநிலையை மீளவும் உருவாக்குவதற்காக எடுத்துக் கொண்ட நகர்வுகள் இந்தியாவிற்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.

எனினும், சிறிலங்காவுக்கான தனது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஆணையகத்தில் சந்திப்பை மேற்கொண்டிருந்தார். சிறிலங்காவின் முக்கிய அரசியற் தலைவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதில் தான் ஆர்வமாக உள்ளதாக மோடி தெரிவித்திருந்தார்.

இதேபோன்று, பங்களாதேசின் முன்னாள் பிரதமர் பேகம் காலிடா சியாவையும் மோடி தனது டாக்காவுக்கான பயணத்தின் போது சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார். இந்தியா தனது அயல்நாடுகளான நேபாளம், பங்களாதேஸ், மாலைதீவு போன்ற நாடுகளின் அரசியற் சக்திகளுடன் பரந்தளவிலான உறவைப் பேண வேண்டிய தேவை இந்தியாவுக்கு உள்ளது.

இந்த வகையில் சிறிலங்காவின் முன்னாள் அதிபருடனும் பங்களாதேசின் முன்னாள் பிரமருடனும் மோடி சந்திப்புக்களை மேற்கொண்டதானது நல்லதொரு நகர்வாகவே நோக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *