மேலும்

கை சின்னத்தில் தனித்துக் களமிறங்கப் போகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி?

SLFPவரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அதன் கை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து, தீவிரமான உள்ளக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரத முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு தேர்தலில் போட்டியிட இடமளிக்கப்படும் என்று அறிவித்ததையடுத்தே, சிறிலங்கா சுதந்திரக் கட்சி அதிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆராயப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுவில் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களே அதிகம்.

இந்த நிலையிலேயே அதன் தமீது செல்வாக்குச் செலுத்த முடியாத நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை தனித்துக் களமிறக்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாமல் சட்டரீதியாகத் தடுப்பது குறித்து மைத்திரிபால சிறிசேன அணியினர் திட்டமிட்டுள்ளனர்.

கை சின்னத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, ஏற்கனவே கட்சி தாவத் திட்டமிட்டிருந்த பலரும் தமது முடிவை மாற்றிக் கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே,  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து, அனுர பிரியதர்சன யாப்பாவை நீக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கட்சியின் தலைவர் என்ற வகையில் தனக்குரிய அதிகாரங்களைக் கொண்டு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தேர்தல்கள் ஆணையாளருக்குத் தெரியப்படுத்த முன்னர், அனுர பிரியதர்சன யாப்பா பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருடன் மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதிகள் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாகவும், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *