இராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே தொடருந்துப் பாலம் அமைக்க இந்தியா திட்டம்
இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில், தொடருந்துப் பாலம் ஒன்றை அமைக்கும் திட்டம் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, இந்திய மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல்துறை அமைச்சர் பொன் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளையும் இணைக்கும் பாலம் அமைக்கும் திட்டம் ஒன்று தொடர்பாக, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் முறைசாராக் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
ஏற்கனவே இரு நாடுகளையும் தரைவழியாக இணைக்கும் திட்டம் ஒன்று இந்தியாவிடம் இருப்பது குறித்து, இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல் வெளியிட்டிருந்தார்.
இதற்கு 23ஆயிரம் கோடி ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
எனினும் இத்தகைய திட்டம் குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்தியா எந்தப் பேச்சுக்களையும் நடத்தவில்லை என்று, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.