மேலும்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் – வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

elections_secretariatசிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று தொடக்கம் தேர்தல்கள் திணைக்களத்தினால் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

தேர்தலில் போட்டியிட விரும்பும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தமது வேட்பு மனுக்களை இன்று தொடக்கம், எதிர்வரும் 13ஆம் நாள் திங்கட்கிழமை நண்பகல் 12 மணிவரை வரைக்கும், கையளிக்க முடியும்.

மாவட்டச் செயலகங்களில் காலை 9.30 மணி தொடக்கம், மாலை 4.15 மணி வரை வேட்புமனுக்கள் கையேற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுயேட்சைக் குழுக்கள் வேட்பாளர் ஒருவருக்கு 2000 ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தாமல் தேர்தலில் போட்டியிடலாம்.

வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் 13ஆம் நாள் நண்பகல் 12 மணிக்கு முடிவடைந்த பின்னர், வேட்பாளர்கள் தொடர்பான எதிர்ப்புகள் தெரிவிக்க ஒன்றரை மணிநேர அவகாசம் வழங்கப்படும்.

அதையடுத்து, 13ஆம் நாள் பிற்பகல் 1.30 மணியளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் பற்றிய விபரங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் அறிவிப்பர்.

இதற்கிடையே, தேர்தலில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களிடம் இருந்து கடந்த வாரம் முதல் கட்டுப்பணம் ஏற்றுக் கொள்ளப்படும் நிலையில், இதுவரையில் 14  சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 03  சுயேட்சைக் குழுக்களும், கம்பகா மாவட்டத்தில் 02 சுயேட்சைக் குழுக்களும், களுத்துறை மாவட்டத்தில் 02  சுயேட்சைக் குழுக்களும், கொழும்பு, நுவரெலியா, திகாமடுல்ல, திருகோணமலை, அநுராதபுர, புத்தளம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *