மேலும்

ராஜபக்ச குடும்பத்தில் இருந்து மற்றொரு வாரிசு நாடாளுமன்றத் தேர்தலில் குதிக்கிறது

Shasheendra Rajapaksaசிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச குடும்பத்தின் இன்னொரு வாரிசு களமிறங்கவுள்ளது. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மகனும், ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சருமான சசீந்திர ராஜபக்ச, இந்த முறை நாடாளுமன்றத் தேரதலில் முதல் தடவையாக போட்டியிடவுள்ளார்.

நேற்று மெதமுலானவில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் பங்கேற்ற சசீந்திர ராஜபக்ச, நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கப் போவதாகவும், மொனராகல மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதில் கவனமாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மகிந்த ராஜபக்ச எந்தக் கட்சியில் எந்த மாவட்டத்தில் போட்டியிடுவது என்பது குறித்து விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் சசீந்திர ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, சசீந்திர ராஜபக்ச ஆகியோர், ராஜபக்ச குடும்பத்தில் இருந்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

பசில் ராஜபக்ச போட்டியிடுவதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு விண்ணப்பிக்கவில்லை.

அதேவேளை, சமல் ராஜபக்ச இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும், அரசியலில் இருந்து ஒதுங்கத் திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *