மேலும்

புலிகளை நினைவு கூர்ந்தாராம் விக்னேஸ்வரன் – ஞானசார தேரர் கூறுகிறார்

gnanasara-courtநீதிமன்றம் விதித்த தடைஉத்தரவை மீறி, விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது ஏன் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

நீதிமன்ற உத்தரவை மீறி கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த குற்றச்சாட்டில், நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஞானசார தேரர் நேற்றுக்காலை கைது செய்யப்பட்டார்.

பின்னர், கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய அவர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது,

gnanasara-court

“நல்லாட்சி எனக் கூறும் இந்த அரசாங்கம் தெற்கில் ஒரு வகையிலும், வடக்கில் ஒருவகையிலும் சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

வடக்கு, கிழக்கு என்று பேதம் பாராமல், இராணுவத்தினர் மீட்டுக் கொடுத்த இந்த நாட்டில் தெற்கில் ஒருவகையான சட்டமும், வடக்கில் இன்னொரு விதமான சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

விடுதலைப் புலிகளை நினைவு கூரவேண்டாம் என நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் புலிகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார்.

தெற்கில் எங்கள் மீது சட்டத்தைப் பிறயோகிக்கும் அரசாங்கம் ஏன் விக்னேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை?

எங்களுக்கு ஒருவிதமாகவும், அவர்களுக்கு ஒரு விதமாகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா?.

அதுபோல, நாட்டின் தேசிய சொத்தான வில்பத்து சரணாலயத்தை அழிக்கும் ரிசாத்  பதியுதீனுக்கு எதிராக, சட்டம் ஏன் தன் கடமையைச் செய்யவில்லை?

சட்டம் சகலருக்கும் சமமாக நிலைநாட்டப்பட வேண்டும்.

ஒரு பிரிவினருக்கு ஒரு விதத்திலும், இன்னொரு பிரிவினருக்கு இன்னொரு விதத்திலும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாயின் இந்த நாடு எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.’ என்றும்  அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *