அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பித்த பேச்சுக்கள் சுமார் ஒரு மணிநேரம் வரை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமானதாக இருந்தது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் மேரி ஹாப் தெரிவித்தார்.
இதையடுத்து, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் இணைந்து செய்தியாளர்கள் முன்பாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கும், அமெரிக்க இராஜாங்கச் செயலருக்கும் இடையிலான சந்திப்பில், இருதரப்பு உறவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக, இந்தப் பேச்சுக்களில் பங்கேற்ற, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சிறிலங்கா அரசாங்கத்தினால், ஜனநாயக அரசாட்சி, நல்லிணக்கம், ஊழல் எதிர்ப்பு ஆகிய விடயங்களில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், ஜோன் கெரி கலந்துரையாடியுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

