மேலும்

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம் – நிறைவேறுமா 19?

parliamentசிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று, பரபரப்பான சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த 19வது திருத்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கடந்த திங்கட்கிழமை விவாதிக்கப்படவிருந்த 19வது திருத்தச் சட்டமூலம், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டங்களால் கைவிடப்பட்டு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலை மீண்டும் நாடாளுமன்றம் கூடும் போது, 19வது திருத்தச் சட்டமூலம், விவாத்ததுக்கு எடுத்தக் கொள்ளப்படும் என்றும், இன்றும் நாளையும் இந்த விவாதம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து நாளை 19வது திருத்தச் சட்டமூலம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதனை நிறைவேற்றுவதற்கு 150 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

கடந்தவாரம் நடந்த கூட்டத்தில், 19வது திருத்தச்சட்ட மூலத்துக்கு ஆதரவளிப்பதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அறிவித்திருந்தது.

எனினும், மகிந்த ராஜபக்ச ஆதரவுக் குழுவினர், இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

அதேவேளை, இன்று சமர்ப்பிக்கப்படும், 19வது திருத்தச் சட்டமூலத்தில், 37 வரையிலான திருத்தங்களைத் தாம் முன்வைக்கப் போவதாகவும், அவை சேர்த்துக் கொள்ளப்பட்டால் மாத்திரமே, வாக்கெடுப்பில் ஆதரவு அளிக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

இந்த திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள மகிந்த ராஜபக்ச ஆதரவு தினேஸ் குணவர்த்தன அணியினர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச வசம் உள்ள 60இற்கும் அதிகமான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், எதிர்த்து வாக்களித்து, சட்டமூலத்தை தோற்கடிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சட்டமூலத்தை நிறைவேற்ற 150 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்ற நிலையில், நாடாளுமன்றத்தில் உள்ள 75 உறுப்பினர்களுக்கு மேல் ஒன்றிணைந்தால், இந்த சட்டமூலம் தோற்கடிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

இந்தநிலையில், மகிந்த ராஜபக்ச தரப்புடன் இணைந்து சட்டமூலத்தை தோற்கடிக்க, 66 உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக நேற்றிரவு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் 19வது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், நாளைய வாக்கெடுப்பில், 19வது திருத்தச் சட்டம் நிறைவேறுமா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ளது.

நாளைய வாக்கெடுப்பில், அரசாங்கம் தோல்வியைத் தழுவினால், விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *