மேலும்

நரேந்திர மோடிக்கு விக்னேஸ்வரன் எழுதிய கடிதம் – இந்திய அதிகாரிகள் அதிர்ச்சி

modi-cmபிரேமானந்தா ஆசிர வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் அனுப்பியுள்ளது இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

பிரேமானந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில், பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்தா, பாலன் எனப்படும் பாலேந்திரன், சதீஸ் எனப்படும் சதீஸ்குமார் ஆகிய மூவரையுமே விடுதலை செய்யக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.

இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இந்த நான்கு இலங்கைத் தமிழர்களுக்குமான தண்டனையை 2005ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.

கமலானந்தாவும், ஏனைய இருவரும், இந்த வழக்கில் போலியாக சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பி்ரேமானந்தா ஆசிரமத்தையும், அதன் சொத்துக்களையும் பராமரிக்க வேண்டியுள்ளதால், அதனைப் பொறுப்பெடுக்க வேறு யாரும் இல்லாத நிலையில், அப்பாவிகளான இவர்களை விடுதலை செய்யுமாறும், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமரிடம் கடிதம் மூலம் கோரியிருக்கிறார்.

சிறிலங்காவின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசரான சி.வி.விக்னேஸ்வரன்,  இந்திய நீதியமைப்பை கேள்விக்குள்ளாக்கியிருப்பதும், குற்றவாளிகளை அப்பாவிகள் என்று சுட்டிக்காட்டியிருதுப்பதும், இந்தியாவின் மூத்த அதிகாரிகளை ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைய வைத்துள்ளது.

பிரேமானந்தா 2011ம் ஆண்டு பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு, கூடலூர் சிறையில் இறந்து விட்டார்.

இவரது உதவியாளர்களான கமலானந்தா, பாலன், சதீஸ் ஆகிய மூவரும், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சியை அடுத்த பாத்திமா நகரில் உள்ள ஆசிரமத்தில் 13 பெண்களை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியது, மற்றும் ரவி என்பவரைக் கொலை செய்து ஆசிரமத்துக்குள் புதைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன.

வன்புணர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கமலானந்தாவின் மனைவியான சந்திராதேவி, கருக்கலைப்பு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, 39 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.அவர் தண்டனைக்காலத்தை முடித்து விடுதலையாகி விட்டார்.

பிரேமானந்தா ஆசிரமத்தில் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும், 13 பெண்களுமே இலங்கைத் தமிழர்களாவர்.

பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம் நடத்தப்பட்ட மரபணுப் பரிசோதனையில் பிரேமானந்தா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு, அவருக்கும் ஏனைய மூவருக்கும் 1997ம் ஆண்டு புதுக்காட்டை நீதிமன்றத்தினால் இரட்டை ஆயுள் தண்டனையும், 66.4 இலட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *