மேலும்

மற்றொரு கேந்திர நிலையை இழக்கப் போகிறது சிறிலங்கா இராணுவம் – அலறுகிறார் வசந்த பண்டார

Wasantha-Bandaraஇந்திய அரசாங்கத்தின் ஆணையின் பேரில், சிறிலங்கா விமானப்படை வசம் உள்ள பலாலி விமான நிலையத்தை, சிவில் விமான நிலையமாக்க முயற்சிகள் நடப்பதாகவும், அவ்வாறு மாற்றப்பட்டால், சிறிலங்கா இராணுவம் வடக்கில் மற்றொரு கேந்திர நிலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், தேசிய அமைப்புகளின் ஒன்றியம் எச்சரித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில், தேசப்பற்று தேசிய இயக்கத்தின் பொதுச்செயலர் கலாநிதி வசந்த பண்டார கருத்து வெளியிடுகையில்,

“2002-2004 காலப் பகுதியில், நோர்வேயின் ஏற்பாட்டில் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்குத் துரோகம் இழைத்தது போன்று, தற்போதைய அரசாங்கத்தினாலும், வடக்கிலும் கிழக்கிலும் உள்ள இராணுவத் தளங்கள் கைவிடப்படுகின்றன.

நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக, சம்பூரில் உள்ள கடற்படைத் தளத்தை சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே அகற்றியுள்ளது.

எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி, சம்பூரில் நிலை கொண்டிருந்த சுமார் 400 கடற்படையினர், அங்கிருந்து விலக்கப்பட்டு, பூசாவுக்கு ஆனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று 2002ம் ஆண்டு போர்நிறுத்த உடன்பாட்டின் கீழும் மேற்கொள்ளப்பட்டது,

பின்னர், மூதூரில் விடுதலைப் புலிகளுடன் நடந்த சண்டையில் ஆயிரக்கணக்கான படையினர் கொல்லப்பட்டனர்.

தற்போதுள்ள தளம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கின்ற போதிலும், வேறு பொருத்தமான இடத்தில் தளம் அமைக்க இடம் ஒதுக்கப்படும் என்று மீள்குடியமர்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறைப் பகுதியிலும், நிலங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக, இராணுவ முகாம்களை அகற்றுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 400 ஏக்கர் காணிகளை அரசாங்கம் எற்கனவே உரிமையாளர்களிடம் வழங்கி விட்டது.

போரின் போது, வடக்கு, கிழக்கில் 33 ஆயிரம் ஏக்கர் தனியார் காணிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தன.

போர் முடிந்த பின்னர், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால், 26 ஆயிரம் ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.

தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் தான், ஏனைய காணிகளை முன்னைய அரசாங்கம் ஒப்படைக்கவில்லை.

ஆனால் தற்போதைய அரசாங்கம் மலிவான அரசியல் இலாபம் அடையும் நோக்கில் தேசிய பாதுகாப்பை காட்டிக் கொடுத்துள்ளது.

தற்போது சிறிலங்கா விமானப்படையின் வசம் உள்ள பலாலி விமான நிலையத்தை, இந்தியாவின் ஆணையின் பேரில் சிவில் விமான நிலையமாக மாற்ற அரசாங்கம் திட்டமிடுகிறது.

பலாலி விமான நிலையம், சிவில் விமான நிலையமாக மாற்றப்பட்டால், சிறிலங்கா இராணுவம் மற்றொரு கேந்திர நிலையை இழக்க நேரிடும்.

தென்னாபிரிக்க பாணியிலான உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க அரசாங்கம் திட்டமிடுகிறது. இது அனைத்துலக தலையீடுகளுக்கே இட்டுச் செல்லும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *