மேலும்

பட்டுப்பாதை திட்டத்தை தடுத்தால் பெரும் பிரச்சினை உருவெடுக்கும் – சீனா எச்சரிக்கை

india-chinaதனது பட்டுப்பாதைத் திட்டத்தில் இந்தியா குறுக்கீடு செய்வதாக குற்றம்சாட்டியுள்ள சீனா, தனது திட்டங்களை இந்தியா தடுத்தால், அது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

‘பட்டுப் பாதை மற்றும் கரையோரப் பட்டுப் பாதைத் திட்டங்களுக்கான ஒரு பாலமாக இந்தியா உள்ளது. இந்தியாவுடன் இணைந்து இத்திட்டங்களை முன்னெடுக்க சீன அரசாங்கம் விரும்புகிறது’ என சீன வெளியுறவு அமைச்சின் கொள்கை வகுப்பு நிறுவனமான ‘சமகால அனைத்துலக உறவுகளுக்கான நிறுவகத்தின்’ இயக்குனர் கூ சிஸெங்க் தெரிவித்துள்ளார்.

பட்டுப் பாதைத் திட்டங்களை முன்னெடுப்பதில் ஏற்படவல்ல தடங்கல்களை நிவர்த்தி செய்வதற்காக இந்திய மாக்கடலில் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் Mausam  திட்டத்துடன் பட்டுப் பாதைத் திட்டங்களையும் இணைப்பதற்கு சீனா விருப்பங்கொண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சால் முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘பட்டுப் பாதைத் திட்டங்களை முன்னெடுப்பதில் இந்தியாவுடன் காத்திரமான ஒத்துழைப்பைப் பேணவேண்டும் என சீன அரசாங்கம் விரும்புகிறது. ஆனால் இந்தியா இதனைத் தடுப்பதற்கு முயற்சித்தால் இது பயங்கரமான விளைவை ஏற்படுத்தும்’ என கூ சிஸெங்க் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தால் பங்களாதேஸ், மியான்மார், சிறிலங்கா மற்றும் ஏனைய நாடுகளுடன் சீனாவால் ஒத்துழைப்பை மேற்கொள்ள முடியும் எனவும் இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘ஆனால் இந்தியா சீனாவின் திட்டங்களைத் தடைசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். ஆனால் இந்தியா அவ்வாறு செய்யும் என நான் நினைக்கவில்லை’ என ‘சமகால அனைத்துலக உறவுகளுக்கான நிறுவகத்தின்’ இயக்குனர் கூ சிஸெங்க் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 7.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்த சீனாவின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் நோக்குடனேயே சீனா தற்போது பட்டுப்பாதைத் திட்டங்களை முன்னெடுப்பதாகவும் இது தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜின்பிங் பேச்சுக்களை நடத்துவார் எனவும் கூ மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனத் திட்டங்கள் ஒரே நோக்கத்தைக் கொண்டுள்ளன எனவும் இவ்விரு நாடுகளும் இணைந்து ‘இப்பிராந்தியத்தில் மிகப் பாரிய பங்களிப்பை மேற்கொள்வதற்கான’ ஒத்துழைப்பை வழங்கமுடியும் என்பதையும் சீனத் தலைமை மோடியிடம் எடுத்துக்கூற முற்படுவார் என  கூ குறிப்பிட்டுள்ளார்.

‘நாங்கள் பிராந்தியத்தின் மிகப்பெரிய சக்திகள். நாங்கள் இப்பிராந்தியத்திற்காக மேலும் அதிக பங்களிப்பை வழங்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளோம். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத் திட்டங்கள் புதிய உடன்படிக்கைகளை ஏற்படுத்த முடியும்’ என இவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் எல்லைப் பிரச்சினைக்கான தீர்வில் தாக்கத்தைச் செலுத்துமா என வினவியபோது ‘ஆம் நிச்சயமாகத் தாக்கத்தைச் செலுத்தும். நாங்கள் இந்தப் பிரச்சினையை முதன்மைப்படுத்த வேண்டியுள்ளது. இரு நாட்டு மக்களின் அபிவிருத்தி மற்றும் இவ்விரு நாடுகளின் முன்னேற்றம் போன்றன மிக முக்கியமானவையாகும்’ என கூ குறிப்பிடுகிறார்.

‘அடுத்த 05-10 ஆண்டுகளுக்கு எல்லைப் பிரச்சினைகள் ஏற்படாதவாறு தீர்வுகாண்பதற்கு இரு நாட்டு அரசாங்கங்கங்களும் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவையுள்ளது. இதற்கு இந்தியாவானது சீனாவின் பட்டுப் பாதைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எமது தரப்பிலிருந்து நோக்கும் போது, மோடியின் பலமான ஆட்சியை முற்று முழுதாகப் பயன்படுத்த எமது அரசாங்கம் விரும்புகிறது. சிக்கலான இப்பிரச்சினையை முதன்மைப்படுத்தித் தீர்வு காண்பதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாக இது காணப்படுகிறது’ என இவர் மேலும் குறிப்பிட்டார்.

‘ஆகவே வரும் ஆண்டுகளில் மோடிக்கான பிறிதொரு வரையறையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதன்பின்னர் இரண்டு அரசாங்கங்களும் இணைந்து பணியாற்ற முடியும். இதன்பின்னர் இப்பிரச்சினையை மிக இலகுவாகத் தீர்க்க முடியும்’ என கூ தெரிவித்தார்.

‘சீன அதிபர் அண்மையில் இந்தியாவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட போது இந்தியாவின் விருந்தோம்பல் மிகச் சிறப்பாகக் காணப்பட்டது. இது சீன மக்களின் நெஞ்சங்களை நெகிழவைத்துள்ளது. சீனாவும் இந்தியாவும் இரண்டு உடல்கள் ஆனால் ஓருயிர் போன்றது என மோடி தெரிவித்திருந்தமை மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என கூ கூறினார்.

இந்தியாவுடன் நல்லுறவைக் கட்டியெழுப்புவதில் சீன அதிபரும் மிகவும் ஆர்வமாக உள்ளார் எனவும், கடந்த ஆண்டு இன்னமும் நெருக்கமான பரஸ்பர உடன்படிக்கைகளை இரு நாடுகளும் மேற்கொண்டதாகவும் கூ தெரிவித்தார்.

‘வருகின்ற ஆண்டில் மிகப் பெரிய இடையூறு காணப்படமாட்டாது. ஏனெனில் இவ்விரு நாடுகளும் அபிவிருத்தியில் அதிகம் கவனம் செலுத்தும் போது தடைகள் ஏற்படாது. நாங்கள் ஒத்த எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்’ எனவும் இவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐரோப்பாவுடன் தரை மற்றும் கடல் வழியாக தன்னை இணைத்துக் கொள்வதற்கான திட்டத்தை சீனா கொண்டுள்ளது. 40 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பட்டுப்பாதைத் திட்டத்தை சீனா ஏற்கனவே அறிவித்திருந்தது.

இத்திட்டத்திற்கு சீன ஆதரவுடன் இயங்கும் ஆசிய கட்டுமான முதலீட்டு வங்கியால் மேலும் 50 பில்லியன் டொலர்களும் BRICS அபிவிருத்தி வங்கியால் 50 பில்லியன் டொலர்களும் நிதி வழங்கப்படவுள்ளன. இவ்விரு வங்கிகளிலும் இந்தியா உறுப்பினராக உள்ளபோதிலும் கரையோரப் பட்டுப்பாதைத் திட்டத்திற்காக சீனாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இத்தொகை தொடர்பாக இந்தியா இன்னமும் பதிலளிக்கவில்லை.

இந்திய மாக்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்குத் தொடர்பாக இந்தியா அதிகம் கவலை கொள்கிறது.

கடந்த ஆண்டு கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் தரித்து நிற்பதற்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் சீனாவின் நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியா அதிருப்தியடைந்தது.

இந்திய மாக்கடல் நாடுகளான மொறிசியஸ், செச்செல்ஸ், சிறிலங்கா போன்றவற்றை இணைக்கின்ற இந்தியாவின் Mausam   திட்டமானது தனது கரையோர பட்டுப் பாதைத் திட்டத்திற்கு இடையூறு விளைவிப்பதை நோக்காகக் கொண்டுள்ளது என சீனா நம்புகிறது.

சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சீனாவிற்கான தனது ஆதரவை வழங்கி வந்தது. ஆனால் இந்த அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு சிறிலங்காவில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சீனாவின் 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை சீனாவுக்கு அதிருப்தியை உண்டுபண்ணியுள்ளது.

பட்டுப் பாதைத் திட்டத்தின் கீழ் 63 திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இவற்றுள் 30 திட்டங்கள் 2017ல் பூர்த்தியாக்கப்படும் எனவும் கூ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *