மேலும்

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராகப் பொறுப்பேற்றார் புகழ்பெற்ற நாவலாசிரியர்

Vikas-Swarupஇந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக, உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரும், இந்திய வெளிவிவகாரச் சேவையின் மூத்த அதிகாரிகளில் ஒருவருமான விகாஸ் ஸ்வரப் நேற்று பதவியேற்றார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், பிரான்ஸ், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய கையுடன், நேற்று இவர் தனது பதவியைப் பொறுப்பேற்றார்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக இருந்த, சையத் அக்பருதீன், எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 29ம் நாள், இந்தியாவில் நடைபெறவுள்ள இந்தோ- ஆபிரிக்க அமைப்பின் மாநாட்டுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்தே, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக, விகாஸ் ஸ்வரப் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்கள் எதிர்காலத்தில் சவாலாக இருக்கும் என்றும்,  அதுதொடர்பான வேலைகளைத் தான் கற்றக் கொள்ளவுள்ளதாகவும், விகாஸ் ஸ்வரப் தெரிவித்துள்ளார்.

Vikas Swarup - Syed Akbaruddin

சையத் அக்பருதீன் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக இருந்த போது சமூக ஊடகங்களின் மூலம் தகவல்களை அளிப்பதில், அதிக கவனம் செலுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் புதிய பேச்சாளராக பொறுப்பேற்றுள்ள விகாஸ் ஸ்வரப்  முன்னர், இந்திய வெளிவிவகார அமைச்சில் ஐ.நா அரசியல் விவகாரங்களுக்கான இணைச்செயலராக பதவி வகித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள விகாஸ் ஸ்வரப், துருக்கி, அமெரிக்கா, எதியோப்பியா, தென்னாபிரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் இராஜதந்திரியாகப் பணியாற்றியவர்.

இவர் உலகப் புகழ்பெற்ற நாவல் மற்றும் சிறுகதை எழுத்தாளராவார்.

விகாஸ் ஸ்வரப் எழுதி, 2005 வெளியிட்ட”Q&A” என்ற புகழ்பெற்ற நாவல், 43 மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்த நாவலை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்லம்டக் மில்லியனர் (Slumdog Millionaire) என்ற திரைப்படம் ஒஸ்கார் விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவர், ‘Six Suspects,’ , ‘The Accidental Apprentice,’ ஆகிய நாவல்களையும் எழுதியிருப்பவர் என்பதுடன், ரைம், நியூஸ் வீக், கார்டியன், டெய்லி ரெலிகிராப் போன்ற உலகப் புகழ்வாய்ந்த சஞ்சிகைகளில், சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *