மேலும்

நௌருவில் உள்ள அகதிகளை கம்போடியாவில் குடியேற்றுகிறது அவுஸ்ரேலியா

நௌரு தீவில் உள்ள அவுஸ்ரேலிய தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் கம்போடியாவில் குடியேற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கம்போடியாவுக்கும், அவுஸ்ரேலியாவுக்கும் இடையில் கடந்த செப்ரெம்பர் மாதம் செய்து கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்பாட்டுக்கு அமைய, வரும் திங்கட்கிழமை முதல் தொகுதி அகதிகளை ஏற்றிய வாடகை விமானம் நொம்பென்னுக்கு செல்லவுள்ளதாக அவுஸ்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

முதல் கட்டமாக 10 அகதிகள் கம்போடியா செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், எனினும், அகதிகளின் முதல் குழு எப்போது புறப்படவுள்ளது என்பதை, அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சு வெளியிடவில்லை.

ஆனால், முதல்தொகுதி அகதிகள் கூடிய விரைவில் கம்போடியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக,  தெரிவித்துள்ளது.

எனினும், கம்போடியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளவர்கள் எந்த நாட்டவர்கள் என்ற விபரத்தையும் அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சு வெளியிடவில்லை.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், சிறிலங்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளே கடந்த சில ஆண்டுகளில் அவுஸ்ரேலியாவை அடைய முயன்றனர்.

நௌருவில் அவுஸ்ரேலியா நடத்தும் தடுப்பு முகாமில் உள்ள அகதிகள் அனைவரும், தன்னார்வ அடிப்படையில் வெளியேற வேண்டும் என்றும் உடன்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இதற்காக, ஆண்டுக்கு 10 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களை கம்போடியாவுக்கு வழங்க வேண்டும் என்று உடன்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு கம்போடியாவில் மீளக்குடியேற முன்வரும், முதற்தொகுதி அகதிகளுக்கு, பரிசுப் பொதியை வழங்குவதாக அகதிகள் மத்தியில் அறிக்கை ஒன்று விநியோகிக்கப்பட்டுள்ளது.

வங்கிக்கணக்கில் பணமும், வேலை தேடுவதற்கான உதவியும், கல்வி வாய்ப்பும், மொழிப்பயிற்சியும், சுகாதாரக் காப்பீடும் வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

படகுகள் மூலம் அவுஸ்ரேலியாவை வந்தடைந்த அகதிகளை, தனது நாட்டில் குடியமர்த்த அவுஸ்ரேலியா மறுத்து வருகிறது.

இவர்களை அவுஸ்ரேலியா, நௌரு மற்றும் பபுவா நியுகினியாவில் தங்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *