மேலும்

போர்க்கப்பல்களுக்காக பாகிஸ்தான் துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்தது சீனா

Gwadar portசிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீன நீர்மூழ்கிக் கப்பல்களை கொழும்புத் துறைமுகத்துக்குள் அனுமதிக்க மறுத்து விட்டதையடுத்து, இந்தியப் பெருங்கடலில், தமது போர்க்கப்பல்களின் பராமரிப்பு மற்றும் விநியோகத் தேவைகளுக்காக பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்துள்ளது.

குவடார் துறைமுகத்தை சீன 40 ஆண்டு குத்தகைக்கு பாகிஸ்தானிடம் இருந்து பெற்றிருக்கிறது.

இதுகுறித்து சீனாவின் குளோபல் ரைம் நாளிதழக்கு கருத்து வெளியிட்டுள்ள, அனைத்துலக கற்கைகளுக்கான சங்காய் நிறுவகத்தின், தெற்காசிய கற்கைகள் பிரிவின் பணிப்பாளர், சாவோ கன்செங்,

“இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடற்படைக்கப்பல்களை பராமரிப்பதற்கும், விநியோகத்துக்கும் குவடார் துறைமுகம் உத்தரவாதம் அளிக்கும்.

சீன போர்க்கப்பல்களுக்கு சிறிலங்கா தனது துறைமுகங்களைத் திறந்து விடும் வாய்ப்பில்லாத சூழ்நிலையில்,  இது சீனாவுக்கும் மிகவும் பரந்தளவிலான முக்கியத்துவம் அளிக்கின்ற விடயமாகும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த துறைமுகம், சீனப் பொருட்கள் இந்தியப் பெருங்கடல் வழியாக கொண்டு செல்வதற்கு பிரதான வழியாக இருக்கும்.

சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு, முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் வழியாக, ஜின்ஜியாங் பகுதியை பொருளாதார கேந்திரமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள தீவிரவாதிகளால், இந்த திட்டத்துக்கு ஆபத்து உள்ளதாக சீன நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன், குவடார் துறைமுகம் அமைந்துள்ள பகுதி நீர்ப் பற்றாக்குறை உள்ள பிரதேசம் என்றும், இதனால் வீடுகள், போக்குவரத்து, மற்றும் பெரும் எண்ணிக்கையான தொழிலாளர்களுக்கு ஏனைய வசதிகளை செய்து கொடுப்பது சிரமமானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *