மேலும்

வடக்கில் படுமோசமான நிலையில் ஊடக சுதந்திரம் – அனைத்துலக ஊடகவியலாளர் கூட்டமைப்பு

ifjயாழ்ப்பாணத்தில் சிறிலங்கா காவல்துறையினரால் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு, சுதந்திர ஊடக இயக்கமும், அனைத்துலக ஊடகவியலாளர் கூட்டமைப்பும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

தமிழ் ஊடகவியலாளர்களை, சிறிலங்கா காவல்துறை அச்சுறுத்துவதாக குற்றம்சாட்டி, பிரசெல்சை தளமாக கொண்ட, அனைத்துலக ஊடகவியலாளர் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாணவி ஒருவர் நெல்லியடி காவல்நிலையத்தில் தாக்கப்பட்டதாக, வெளியான செய்தி தொடர்பாக, உதயன் நாளிதழின் சுதந்திர ஊடகவியலாளான லோகதயாளன், கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.

பருத்தித்துறை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவர், எதிர்வரும் 19ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட போதும் பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் பணியாற்றும், வினோஜித், பிரகதீபன், மயூரப்பிரியன் ஆகிய ஊடகவியலாளர்கள் கடந்த 7ம் நாள் தனியான சம்பவம் ஒன்றில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டது குறித்தும், அனைத்துலக ஊடகவியலாளர் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாண ஊடகவியலாளர்களை சிறிலங்கா காவல்துறை அச்சுறுத்தல் முனைகிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக புதிய அரசாங்கம் வாக்குறுதிகளைக் கொடுத்த போதிலும் கூட, சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் படுமோசமான நிலையில் உள்ளதையே இந்தச் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

சிறிலங்காவில் ஊடக சுதந்திரத்தை மீளவும் உறுதிப்படுத்துவதில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும்.

நாட்டின் வடக்கு பகுதியில் சிறிலங்கா காவல்துறை மெதுவாக, வடிகட்டுகிறது என்பதை இந்தச் செய்தி தெளிவாக்கியுள்ளது.

இந்த அச்சுறுத்தும் செயற்பாடுகளையும், அவதூறு குற்றச்சாட்டில் என்.லோகதயாளன் என்ற ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டதையும் நாம் கண்டிக்கிறோம்.

இந்தச் சம்பவங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும்.

அது ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கான அதன் கடப்பாடாகும்” என்றும் அனைத்துலக ஊடகவியலாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *