மேலும்

சீன, சிறிலங்கா படைகள் பங்கேற்கும் ‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு’ போர்ப்பயிற்சி

'Silk Road Cooperation - 2015' -ex‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு -2015’ என்ற பெயரில், சிறிலங்கா இராணுவத்துக்கும், சீன மக்கள் ஆயுதக் காவல்படைக்கும் இடையில் புதிய போர்ப் பயிற்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் இந்தப் புதிய போர்ப்பயிற்சியின் முதற்கட்டம், கடந்த மாதம் 29ம் நாள், சீனாவில் தென்பகுதியில் உள்ள குவாங்சோ இராணுவப் பயிற்சித் தளத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இருநாட்டுப் படைகளும் தமது தமது போராற்றலைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கில் குறிப்பாக, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தமது திறனை அதிகரித்துக் கொள்வதற்கு இந்தப் போர்ப்பயிற்சியை மேற்கொண்டுள்ளன.

ஒரு தரப்பிடம் இருந்து மற்றத் தரப்பு கற்றுக் கொள்வதற்கும், தீவிரவாத முறியடிப்பில் தமது ஆற்றலை அதிகரித்துக் கொள்வதற்கும் இந்தப் போர்ப்பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக, சீனாவின் பாதுகாப்பு இணையத்தளமாக ‘சைனா மிலிட்டரி’ ஒன்லைன் தெரிவித்துள்ளது.

மார்ச் 29ம் நாள் ஆரம்பிக்கப்பட்ட முதற்கட்ட பயிற்சியில், அபிவிருத்தி அடைந்துள்ள தீவிரவாத எதிர்ப்புச் செயற்பாடுகள் மற்றும் தந்திரோபாய பயிற்சிகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

'Silk Road Cooperation - 2015' -ex

தீவிரவாத எதிர்ப்பு ஒத்திகையின் போது, சுடுதல், கைப்பற்றுதல், ஏறுதல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

தந்திரோபாயப் பயிற்சிகளில், பிரதானமாக, கட்டங்களில் தேடுதல் நடத்துதல், பணயக் கைதிகளை மீட்பு, விமான, பேருந்து கடத்தல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை, ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளதாக,  சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பயிற்சித் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் சூ ஹய்ஹூய் தெரிவித்துள்ளார்.

சீன- சிறிலங்கா படைகளுக்கு இடையிலான இந்தப் போர்ப்பயிற்சியின் இரண்டாவது கட்டம், வரும் ஜுன் மாதம் சிறிலங்காவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பங்கேற்பதற்காக, சீனா பல விசேட நடவடிக்கைக் குழுக்களை சிறிலங்காவுக்கு அனுப்பவுள்ளது.

இந்த இரண்டாவது கட்ட ‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு-2015’ போர்ப்பயிற்சியில் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல் பிரிகேட் மற்றும், சிறப்பு நடவடிக்கை பிரிகேட் என்பன ஈடுபடவுள்ளன.

கடந்த மாதம் 29ம் நாள் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போர்ப்பயிற்சியின் முதல் கட்டம் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற விபரத்தை சீனா வெளியிடவில்லை.

அதேவேளை, இந்தப் போர்ப் பயிற்சி பற்றிய தகவல்களை சிறிலங்கா முற்றாகவே மறைத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *