மேலும்

ஜூன் இறுதியிலேயே உள்நாட்டு விசாரணை அறிவிப்பு – பின்வாங்குகிறார் மைத்திரி

சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கான பொறிமுறை பற்றிய விபரங்களை வரும் ஜூன் மாத இறுதியிலேயே வெளியிடவுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரைம் சஞ்சிகைக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிபிசி சிங்கள சேவைக்கு அளித்திருந்த செவ்வியில் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை ஒரு மாத காலத்துக்குள் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

எனினும், ரைம் சஞ்சிகைக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், ஜூன் மாத இறுதியில் போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை பற்றிய விபரங்களை அறிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“இந்த விவகாரத்தைக் கையாள்வதற்கான மிகவும் வலுவான உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்கவுள்ளோம் என்பதை ஐ.நாவுக்கு நாம் அறிவித்துள்ளோம்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஊடாக ஆலோசனைகளை நாம் கேட்டுள்ளோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வரும் மே மாதம் நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜூன் இறுதியில் அல்லது ஜூலையில் தேர்தலை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *