மேலும்

றோவும் ராஜபக்சவும் – ஒரு முன்னாள் இந்திய ஊடகவியலாளரின் பார்வை

ராஜபக்ச தொடர்பில் இந்தியா விழிப்புணர்வுடன் இருப்பதே விவேகமானது. பங்களாதேசில் ஷேக் ஹசினாவிடம், பேகம் கலீடா சியா தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் சியாவை இந்தியா கருத்திலெடுக்கவில்லை. இதே தவறை மீண்டும் சிறிலங்கா விடயத்தில் இந்தியா மேற்கொள்ளக்கூடாது.

இவ்வாறு ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் முன்னாள் ஊடகவியலாளர் ‘கமலேந்திர கன்வர்’ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.

பங்களாதேசத்தை நிறுவிய ஷேய்க் முஜிப்-உர்-ரஹ்மான் ஆகஸ்ட் 15, 1975ல் டாக்காவிலிருந்த அவரது வதிவிட இல்லத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட போது, இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ஆய்வு மற்றும் பகுப்பாய்வு அமைப்பு (றோ) தனது நட்பு நாடான பங்களாதேசின் முதலாவது பிரதமர் படுகொலை செய்யப்படவுள்ளார் என்பதை முற்கூட்டியே எதிர்வுகூறத் தவறியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதேபோன்று சிறிலங்காவில் அண்மையில் தேர்தல் மூலம் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் தனது தோல்விக்கு இந்தியாவின் றோ அமைப்பின் சதியே காரணம் என இந்தியாவின் முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தற்போது நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தலைமையிலான எதிரணியினருக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் தன்னைத் தோற்கடிப்பதற்கான சதித்திட்டத்தை ‘மேற்குலக அமைப்புக்கள்’ CIA மற்றும் MI-16 ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவின் புலனாய்வு அமைப்பே மேற்கொண்டதாக மகிந்த ராஜபக்ச தனது நேர்காணலில் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதாவது தனது தேர்தல் தோல்விக்கு றோ அமைப்பே காரணம் என மகிந்த ராஜபக்ச பழிசுமத்தியுள்ளார்.

இக்குற்றச்சாட்டை முன்வைத்த ராஜபக்ச இது தொடர்பில் மோடி அரசாங்கத்தைப் பழிசுமத்தவில்லை. பதிலாக இது நீண்டகாலத் திட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

‘சீனக் கோரிக்கை தொடர்பாக அவர்கள் என்னைத் தவறாகப் புரிந்துள்ளனர். இதனாலேயே அவர்கள் என்னைத் தோற்கடிப்பதற்கான சதித்திட்டத்தைத் தீட்டினார்கள்’ என மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

றோ அமைப்பானது 1970 களில் செயற்பட்டதை விடத் தற்போது அவர்களின் செயற்பாடுகள் விரிவடைந்துள்ளது. பாகிஸ்தானின் ISI இப்பிராந்தியத்தில் குறிப்பாக இந்தியாவில் கிளர்ச்சிகளில் ஈடுபடுவதை றோ அமைப்பு தடுத்துள்ளது. தற்போது, கிளர்ச்சிகள் அதிகம் இடம்பெறும் வடமேற்கு மாகாணத்தின் ஊடாக இஸ்லாமபாத்தில் எதிர்ப்புக்களை ஏற்படுத்தும் விதமாக எதிர்க்கட்சிக்கு இந்தியா உந்துதல் வழங்குவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில், றோ அமைப்பானது உறுதியான வலைப்பின்னலை உருவாக்கியுள்ளதுடன், இந்திய நலன்களைப் பாதுகாப்பதற்கான தேசிய அரசியலிலும் செல்வாக்குச் செலுத்துகிறது.

பங்களாதேசில், இந்தியாவுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் பேகம் காலிடா சியாவால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளுக்கு எதிராக ஷேய்க் ஹசீனாவைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் றோ அமைப்பு ஈடுபட்டுள்ளது.

1988ல் மாலைதீவில் இடம்பெறவிருந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை முறியடிப்பதற்காக மாலைதீவின் அப்போதைய அதிபர் அப்துல் கயூமின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இந்தியப் படைகளை விமானம் மூலம் மாலைதீவுக்கு அனுப்பியிருந்தமை இந்திய வலிமையின் முதலாவது சமிக்கையைத் தெளிவாகக் காண்பித்தது.

இந்தியாவிலிருந்து மாலைதீவுக்கு அனுப்பப்பட்ட 1600 பரசூட் துருப்புக்களும் கமாண்டோக்களும் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் சதித்திட்டத்தை முறியடித்தனர்.

இதுபோன்று அண்மைய காலங்களில் இந்தியாவின் பலம் நிரூபிக்கப்பட்ட இவ்வாறான சம்பவங்கள் அறியப்படவில்லை. ஆனால் தற்போது சிறிலங்கா அதிபர் றோ அமைப்பே தனது தோல்விக்குக் காரணம் எனக் கூறியுள்ளார். இது இந்தியாவின் பலத்தை அங்கீகரிக்கின்ற புதிய விடயமாகக் காணப்படுகிறது.

அதாவது இந்தியா ஒரு பிராந்திய சக்தியாக எழுந்துள்ளது எனக் கூறப்படுகின்றது. ஒவ்வொரு நாடும் தனது மூலோபாய நலன்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது.

தனது நலன்களில் சீனா மற்றும் பாகிஸ்தான் பாதிப்புச் செலுத்துவதை இந்தியா உணராமலிருக்கும் அளவுக்கு, அது சூதுவாது எதுவும் அறியாத ஒரு நாடாக இருக்க முடியாது.

பிரதமர் நரேந்திர மோடி தற்போது மொரிசியஸ், செச்செல்ஸ் மற்றும் சிறிலங்கா போன்ற நாடுகளுக்கான தனது பயணத்தை மேற்கொண்டுள்ளதானது தனது அயல்நாடுகளுடனான உறவை மேலும் வளர்த்து இதன்மூலம் இப்பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதற்கான ஒரு சாட்சியமாகும்.

கடந்த காலத்தில், நேபாளம் மற்றும் பங்களாதேஸ் நாடுகளுடனான உறவானது இந்திய அரசியல் மாற்றங்களால் பாதிப்பைச் சந்தித்தது. இத்தடவை இந்தியா பிழையான வழிக்குச் செல்ல விரும்பவில்லை.

சிறிலங்காவில் சிறிசேன அரசாங்கத்தின் நட்பார்ந்த உறவைப் பேணிக்கொள்வதே மோடியின் சிறிலங்காவுக்கான பயணத்தின் முன்னுரிமையாகக் காணப்பட்ட போதிலும் ராஜபக்சாவுடனும் சந்திப்பை மேற்கொள்வதென திரு.மோடி தீர்மானித்திருந்தார்.

சிறிசேனவால் சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தல்களை எப்போது நடாத்தலாம் என்கின்ற ஐயப்பாடு நிலவும் இக்காலப்பகுதியில் பிரதமர் மோடி சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார். சிறிலங்காவின் அரசியற் சட்டத்தின் பிரகாரம், அதிபர் தேர்தலில் கிடைக்கப்பெறும் வாக்குகள் அதில் போட்டியிட்ட தனிப்பட்டவர்களுக்கானது.

ஆனால் சிறிலங்காவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடாகவே பிரதமர் தெரிவு செய்யப்படுவது வழக்கமாகும். சிறிசேனவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே மகிந்த ராஜபக்ச தற்போதும் அங்கம் வகிக்கின்றார். இதனால் இவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து போதியளவு ஆதரவைப் பெற்றால் அரசாங்கத்தை ஆளும் உரிமையைப் பெறலாம்.

சீனாவை நல்லுறவைப் பேணிய ராஜபக்ச தனது தேர்தல் தோல்விக்கு இந்தியாவின் மோடி அரசாங்கமே றோ அமைப்பைப் பயன்படுத்தியதாக பழிசுமத்த அச்சப்படுகிறார்.

தனக்கெதிராக எதிரணி தேர்தலில் போட்டியிடுவதற்கு ‘மேற்குலக அமைப்புக்களுடன்’ இணைந்து றோ அமைப்பு சதித்திட்டம் தீட்டியதாக ராஜபக்ச கூறும் அதேவேளையில் இதற்கு மோடியோ அல்லது இந்திய அரசாங்கமோ பொறுப்பு எனத் தான் நம்பவில்லை எனக் கூறியுள்ளார்.

இவ்வாறான சூழலில், ராஜபக்ச தொடர்பில் இந்தியா விழிப்புணர்வுடன் இருப்பதே விவேகமானது. பங்களாதேசில் சியா, ஹசினாவிடம் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் சியாவை இந்தியா கருத்திலெடுக்கவில்லை. இதே தவறை மீண்டும் சிறிலங்கா விடயத்தில் இந்தியா மேற்கொள்ளக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *