மேலும்

19வது அரசியலமைப்பு திருத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் – அதிபரின் அதிகாரங்கள் குறையும்

sri-lanka-emblemசிறிலங்கா அதிபரின் நிறைவேற்று அதிகாரங்கள் பலவற்றைக் குறைக்கவும், தேர்தல் முறைமையில் மாற்றங்களைக் கொண்டு வரவும், வழி செய்யும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனைக்கு சிறிலங்காவின் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

நேற்று நடந்த அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தில் இதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 19ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனையை நேற்று நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது.

புதிய அரசியலமைப்புத் திருத்த யோசனைகளில், சிறிலங்காவில் தற்போதுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறை நீக்கப்பட்டு, அதிபர் மற்றும் நாடாளுமன்றமும் சேர்ந்து நிர்வகிக்கும் ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்படும்.

அனைத்து தேர்தல்களிலும், விகிதாசார பிரதிநிதித்துவ முறை நீக்கப்பட்டு, தொகுதி ரீதியாக நேரடியாகவும், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படியும், பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும்.

ஒருவர் அதிகபட்சமாக இரண்டு ஆட்சிக்காலத்துக்கு மட்டுமே அதிபர் பதவியை வகிக்க முடியும் என்ற விதிமுறை மீண்டும் கொண்டு வரப்படுகிறது.

அதிபரின் ஒரு ஆட்சிக்காலம் ஆறு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது.

நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டு ஓராண்டு கடந்துவிட்ட பின்னர், அதனை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு இருக்காது. ஒரு நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரே அதனைக் கலைக்கும் உரிமை மீண்டும் அதிபருக்கு ஜனாதிபதிக்கு கிடைக்கும்.

ஒருவர் அதிபராக இருக்கும்போது அவர் அதிகாரபூர்வமாக செய்யும் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு இருந்து வருகின்ற சட்ட ரீதியான தடை அகற்றப்படும்.

அதிகபட்சமாக 30 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், அதிகபட்சமாக 40 பிரதி அமைச்சர்களும் என மொத்தம் 70 பேர் மட்டும் அமைச்சர்களாக இருக்க முடியும் என்ற வரம்பு ஏற்படுத்தப்படுகிறது.

17ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

நாட்டின் சுதந்திர ஆணைக்குழுக்கள் அதிபரால் அல்லாமல் சுயாதீனமான முறையில் மீண்டும் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதை இந்தத் திருத்தம் உறுதிப்படுத்தும்.

ஆனாலும், அமைச்சரவையின் தலைவராகவும், முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் தொடர்ந்தும் சிறிலங்கா அதிபரே விளங்குவார்.

பிரதமரையும் அமைச்சர்களையும் நியமிக்கும் அதிகாரம் தொடர்ந்து அதிபரிடமே இருக்கும்.

அதேவேளை, தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பாக நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசியலமைப்புத் திருத்தம் மாகாணசபைகளின் அதிகாரங்களைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீர்திருத்தங்கள், ஒரு வழமையான சட்டப் பிரேரணையாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படும்.

இந்த பிரேரணைக்கு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து முக்கியக் கட்சிகளின் ஆதரவும் கிடைத்தால்தான் இது சட்டமாக நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *