மேலும்

“வடக்கு, கிழக்கை தவறாக கணித்து விட்டேன்” – ‘தி ஹிந்து’வுக்கு மகிந்த அளித்த செவ்வியின் முழுவடிவம்

mahinda“நான் வடக்கு, கிழக்கு வாக்குகளைத் தவறாகக் கணிப்பிட்டிருந்தேன். கிழக்கு மற்றும் வடக்கில் இப்படி அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  மாகாணசபைத் தேர்தல்களில் கூட, 55 சதவீத மக்களே வாக்களித்திருந்தனர். ஆனால் இத்தடவை 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாக்களித்தனர். இது எப்படி என்பது எனக்குத் தெரியாது.”

இவ்வாறு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘தி ஹிந்து’ நாளிதழின், சுஹாசினி ஹைதருக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வெளியான இந்தச் செவ்வியை மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

கேள்வி: நீங்கள் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்த ஒரு தேர்தலாக தற்போது நடந்து முடிந்த அதிபர் தேர்தல் காணப்பட்டது. தங்களது ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்னரேயே நீங்கள் இத்தேர்தலை நடாத்தியிருந்தீர்கள். இந்நிலையில் இத்தேர்தலில் நீங்கள் தோல்வியுற்றதற்கான காரணம் என்ன?

பதில்: நான் வடக்கு, கிழக்கு வாக்குகளைத் தவறாகக் கணிப்பிட்டிருந்தேன். தெற்கில் நான் தேர்தலில் வெற்றி பெற்றேன். ஆனால் கிழக்கு மற்றும் வடக்கில் இப்படி அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  மாகாணசபைத் தேர்தல்களில் கூட, 55 சதவீத மக்களே வாக்களித்திருந்தனர். ஆனால் இத்தடவை 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாக்களித்தனர். இது எப்படி என்பது எனக்குத் தெரியாது. வடக்கு கிழக்கு தேர்தல் முடிவை அறிந்த போது நான் தோற்கப் போகிறேன் என்பது எனக்குத் தெரிந்து விட்டது.

கேள்வி: வடக்கு கிழக்கில் இத்தேர்தலில் அதிகளவான மக்கள் வாக்களித்தனர் என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் நாட்டின் பல்வேறு சமூகத்தவர்களின் வாக்குகளைப் பெறவில்லை. அதாவது கிராமிய மக்கள், ஏழைகள், சிறுபான்மையினர் போன்ற பல்வேறு தரப்பினரும் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லையா?

பதில்: இது சரியான கருத்தல்ல. தெற்கில் நான் வெற்றி பெற்றேன். தென்மாகாணம், ஊவா மாகாணம், வடமத்திய மாகாணம், வடமேல் மாகாணம் போன்றவற்றில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால் எமது பெரும்பான்மையை இழந்துவிட்டோம்.

கேள்வி: நீங்கள் தேர்தலில் தோல்வியுறப் போகிறீர்கள் என அறிந்தபோது நீங்கள் என்ன செய்தீர்கள்? ஏனெனில் நீங்கள் ஆட்சியை மேலும் தக்கவைத்துக் கொள்வதற்கு இராணுவத்தைப் பயன்படுத்த முயற்சித்ததாக சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் குறிப்பாக வெளியுறவு அமைச்சர் சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?

பதில்: இல்லை. இது முட்டாள்தனமானது. நான் வத்திக்கானுக்குச் சென்றிருந்த போது, என்னிடம் வத்திக்கான் தலைமை நான் தேர்தலில் தோல்வியுற்றால் என்ன செய்வேன் எனக் கேட்ட போது, ஐந்து நிமிடங்களுக்குள் நான் ஆட்சியிலிருந்து விலகிவிடுவேன் எனக் கூறியிருந்தேன். இதேபோன்று நான் தேர்தலில் தோல்வியுற்றதும் உடனடியாக பதவியிலிருந்து விலகிக் கொண்டேன். இந்த அரசாங்கம் என் மீது வீண்பழி சுமத்துகிறது. வெறும் இரண்டு மணித்தியாலங்களுக்குள் ஆட்சிக்கவிழ்ப்பை மேற்கொள்வதற்கான சதியை எவ்வாறு மேற்கொள்ள முடியும்? தற்போதைய அரசாங்கம் மேற்குலக அரசாங்கங்களுடன் பேசிய போது இந்தக் கருத்தைக் கூறியிருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.

கேள்வி: இத்தேர்தலில் துரோகம் இழைக்கப்பட்டதாக நீங்கள் கூறியுள்ளீர்கள். இது எதனைக் கருதுகிறது? யார் உங்களுக்குத் துரோகமிழைத்தது?

பதில்: எனது சொந்த மக்கள் என்னை விட்டு விலகிவிட்டனர். முதல் நாளிரவு அவர்கள் என்னுடன் சேர்ந்து உணவருந்தினர். அடுத்த நாள் அவர்கள் என்னை விட்டுச் சென்றுவிட்டனர். இதனை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. ஆனால் இது இரண்டு ஆண்டுகளாகத் தொடரப்பட்டது.

கேள்வி: அதிபர் சிறிசேன மற்றும் தங்களது அரசாங்கத்திலிருந்த ஏனைய உறுப்பினர்கள் உங்களுக்குத் துரோகமிழைத்ததாகக் கூறுகிறீர்கள். பாகிஸ்தானின் Dawn   ஊடகம் மற்றும் சீனாவின் SCMP ஊடகங்களுக்கு நீங்கள் வழங்கிய நேர்காணலில் சிறிலங்காவில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்திற்கு றோ அமைப்பே காரணம் எனக் குற்றம்சுமத்தியுள்ளீர்கள். இதனை நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: றோ மட்டுமல்ல மேற்குலக அமைப்புக்களும் ஒன்றாக இணைந்து இந்த விடயத்தில் பணியாற்றியுள்ளனர். இது முதற்தடவையாக சாத்தியமாகியுள்ளது. (சிரிக்கிறார்)

கேள்வி: இது ஒரு சதித்திட்டம் என நீங்கள் கருதுகிறீர்கள். இவர்களது குற்றங்களை  உறுதிப்படுத்துவதற்கான சாட்சியம் ஏதும் உள்ளதா?

பதில்: இது மிகவும் தெளிவானது. அவர்களிடம் இது தொடர்பாக நீங்கள் கேட்டால் அவர்கள் ஆம் எனப் பதிலளிப்பார்கள். அவர்கள் இதனை மறுக்கமாட்டார்கள்.

கேள்வி: ஆனால் இதனை இந்திய அரசாங்கம் மறுதலித்துள்ளது?

பதில்: அதிகாரபூர்வமாக இந்தப் பதில் சரி. ஆனால் இந்த நாட்டில் இந்திய அமைப்புக்கள் செயற்படுகின்றன.

கேள்வி: நடந்து முடிந்த தேர்தல் மோசடியானது என நீங்கள் கூறுகிறீர்களா?

பதில்: இல்லை. என்னால் இதனைக் கூறமுடியுமானளவுக்காவது உள்ளதால் இது ஒரு சுதந்திரமான நேர்மையான தேர்தல் என்றே நான் கருதுகிறேன்.

கேள்வி: உங்களது எதிரணிக்கு றோ மற்றும் ஏனைய மேற்குலக அமைப்புக்கள் அனுசரணையாக இருந்துள்ளன என்பதையா நீங்கள் மறைமுகமாகக் கூறுகிறீர்கள்?

பதில்: ஆம்.

கேள்வி: இந்தியாவில் றோ அமைப்பானது அரசியல் வழிகாட்டலின் கீழ் பணிபுரிகிறது. ஆகவே இதற்கு அரசியற் தடை விதிக்க வேண்டும் என நீங்கள் கூறுகிறீர்களா? பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தை நீங்கள் குற்றம் சுமத்துகிறீர்களா?

பதில்: இல்லை. நான் ஒருபோதும் திரு.மோடியைக் குற்றம் சுமத்தவில்லை. ஏனெனில் இவர் ஆட்சிக்கு வந்து இன்னமும் ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. இது ஒரு நீண்டகாலத் திட்டமாகும். சீனக் கோரிக்கை தொடர்பில் இந்தியா என்னைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளது. இதன் காரணமாகவே இவர்கள் இதனைத் திட்டமிட்டிருந்தனர். என்னை அவர்கள் இது தொடர்பாகக் கேட்டபோது, எனது மக்களின் அபிவிருத்திக்காக சேவையாற்றுவது எனது கடமையாகும் என நான் கூறியிருந்தேன். நான் போரை வென்றெடுத்தேன். எனது அடுத்த நகர்வாகப் பொருளாதார அபிவிருத்தி காணப்பட்டது.

கேள்வி: சீனக் கோரிக்கை தொடர்பாகக் கேட்க விரும்புகிறேன். ஆனால் முதலில், ‘இது மிகவும் வெளிப்படையானது. அமெரிக்கர்கள், நோர்வேஜியர்கள், ஐரோப்பியர்கள் போன்றோர் என்னை எதிர்த்து வெளிப்படையாகப் பணியாற்றுகின்றனர். றோ அமைப்பும் கூட. நீங்கள் இந்தியர்களிடம் ஏன் நீங்கள் இதனைச் செய்கிறீர்கள் எனக் கேட்டிருந்தீர்கள்’ என தங்களால் வழங்கப்பட்ட நேர்காணலில் கூறியிருந்தீர்கள். ஆகவே நீங்கள் யாரைக் கேட்டிருந்தீர்கள்? இது தொடர்பான பதில் என்னவாக இருந்தது?

பதில்: இவ்வாறு நான் கூறவில்லை என நினைக்கிறேன்.

கேள்வி: றோ அமைப்பு உங்களுக்கு எதிராகச் செயற்படுவதாகவும் ஆனால் இந்திய அரசாங்கம் செயற்படவில்லை எனவும் கூறியிருந்தீர்கள். இது தொடர்பான பதில் என்ன?

பதில்: நான் கூறியிருந்தேன். கொழும்பில் பணியாற்றும் றோ அமைப்பின் பிரதம அதிகாரியையே நான் குறிப்பிட்டேன். இவர் விரைவாக அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என நான் கூறியபோது இந்தியாவும் இதற்கு உடன்பட்டது. ஆனால் தேர்தலின் இறுதித் தருணத்திலேயே கோரப்பட்டதால் இது தாமதமாகியது.

கேள்வி: கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்களுக்கான ஒன்றுகூடலில் நீங்களும் திரு.மோடியும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தீர்கள். தேர்தலில் வெற்றிபெற வேண்டும் எனவும் அவர் தங்களை வாழ்த்தியிருந்தார். தற்போது திரு.மோடி சிறிலங்காவுக்கு வந்துள்ள நிலையில் நீங்கள் அவரைச் சந்திப்பீர்களா?

பதில்: ஆம். இதற்கு முன்னர் மூன்று தடவைகள் நான் திரு.மோடியைச் சந்தித்துள்ளேன். அவர் எனது நாட்டுக்கு வரும்போது நான் அவரைச் சந்திக்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

கேள்வி: தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நீங்கள் தவறிவிட்டதாக இந்தியா கூறுகிறது. இப்பிராந்தியத்தில் சீனா தனது மூலோபாய செல்வாக்கைச் செலுத்துவதற்கு நீங்கள் அனுமதித்தீர்கள். 2009 உடன் ஒப்பிடும்போது இந்திய-சிறிலங்கா உறவுகள் விரிசலடைந்ததற்குக் காரணம் என்ன?

பதில்: இந்தியா தனது கோட்பாட்டை மாற்றியது. மேற்குலக நாடுகளின் செல்வாக்கின் காரணத்தால் 2012ல் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா எனக்கெதிராக வாக்களித்தது. இந்தச் சம்பவம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவே சீன விவகாரத்தை தவறாகப் புரிந்துகொள்வதற்குக் காரணமாக இருக்கலாம் என நான் கருதுகிறேன்.

கேள்வி: சிறிலங்காவில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இரண்டு தடவைகள் தரித்து நிற்பதற்கு நீங்கள் அனுமதி வழங்கியதன் மூலம் மோடியின் இந்திய அரசாங்கத்துடன் பகைத்துக் கொள்ள வேண்டியேற்பட்டது. இது நிச்சயமாகத் தவறான புரிதலாக இருக்க முடியாதல்லவா?

பதில்: நல்லது. சீனக் கப்பல்கள் இங்கு வரும்போது பொதுவாக அவர்கள் சீனாவிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு தகவல் வழங்குவார்கள். இத்தடவையும் அவர்கள் அதனைச் செய்திருக்க வேண்டும். அனைவரும் இதனை அறிந்திருப்பார்கள். சீனக் கப்பல்கள் மாலைதீவு நோக்கி மேற்கு நோக்கிச் சென்று திரும்பும் போது மீண்டும் எமது நாட்டின் ஊடாகவோ செல்லும். இது சாதாரண விடயமாகும்.

கேள்வி: இது சாதாரணமானது எனில், இது தொடர்பாக இந்தியாவுடன் ஏற்பட்ட தவறான புரிதலைத் தெளிவாக்குவது கடினமாக இருந்தது ஏன்?

பதில்: இந்த விடயத்தை அவர்கள் பெரிதாகக் கருதுகிறார்கள் என நான் கருதுகிறேன்.

கேள்வி: இதற்கு மாறாக, சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடனான இந்தியாவின் உறவு பெரிதும் முன்னேற்றமடைந்துள்ளது. குறைந்தது இரண்டு மாதங்களில் மிகப் பெரிய நான்கு சுற்றுப்பயணங்கள் நிகழ்ந்துள்ளன. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: இது நல்ல விடயம் என நான் கருதுகிறேன். இதற்காக நான் அவர்களை வாழ்த்துகிறேன். எமது அரசாங்கம் ஒருபோதும் இந்தியாவிற்கு விரோதமானவர்கள் அல்ல. நான் எப்போதும் இந்தியாவின் ஆதரவைப் பெற முயற்சித்தேன். ஏனைய நாடுகளுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்னர் நான் இந்தியாவையே முதன்மைப்படுத்தினேன். அம்பாந்தோட்டைத் துறைமுகம், விமானநிலையம், கொழும்புத் துறைமுகம் போன்றவற்றை அபிவிருத்தி செய்யுமாறு நான் இந்தியாவிடமே முதலில் கோரியிருந்தேன். ஆனால் அவர்கள் ஒருபோதும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

கேள்வி: இந்திய-சிறிலங்கா அரசாங்கங்களுக்கிடையில் புதிய உறவு கட்டியெழுப்புப்படும் நிலையில் இந்திய மீனவர்கள் சிறிலங்கா கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்தால் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா உரிமை கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளமை தொடர்பான தங்களின் கருத்து என்ன?

பதில்: அவர் ஏன் இவ்வாறு கூறினார் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ரணில் ஒரு முதிர்ச்சயடைந்த அரசியல்வாதி. அவர் இவ்வாறான ஒரு அறிவித்தலை விடுத்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். மீனைத் தேடி மீனவர்கள் வருவதால் அவர்கள் மீது பழிசுமத்த முடியாது என நான் எப்போதும் கூறுவேன். இந்திய அரசாங்கம் எமது மக்களைக் கைதுசெய்கிறார்கள். எமது மீனவர் ஒருவர் சிறையில் இறந்தார். நாங்கள் அவர்களைக் கைதுசெய்ய ஆரம்பித்த போது நாங்கள் அவர்களை ஒருசில வாரங்கள் வரை தடுத்து வைத்து விட்டுப் பின்னர் விடுவித்தோம். அவர்கள் எமது எல்லைகளுக்குள் வருவதைக் குறைக்க விரும்பினோம்.

கெட்டவாய்ப்பாக, அவர்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதுவே எமக்குப் பிரச்சினையாக இருந்தது. இது நோர்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்கள் எமக்கு பலநாட்கள் தொடர்ந்தும் மீன்பிடியில் ஈடுபடக்கூடிய படகுகளைத் தந்தார்கள். ஆனால் இந்தியாவுக்கு ஆழ்கடல் இழுவைப் படகுகளை வழங்கினார்கள். இது இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான நிலையை ஏற்படுத்தியது. இந்திய மீனவர்கள் இவ்வாறான மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியமை நீதியற்றதாகும். இது தமிழ் மீனவர்கள் அதிகம் உள்ள சிறிலங்கா மீனவர்களைப் பாதிக்கின்றது.

கேள்வி: இதேவேளையில், சீனாவுடனான புதிய அரசாங்கத்தின் உறவுநிலை விரிசலடைவது போல் தெரிகிறது. கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தியமையை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?

பதில்: அவர்கள் இதனைச் செய்திருக்கக் கூடாது. இன்னும் நூறு ஆண்டுகளில் நாங்கள் இவ்வாறான துறைமுக நகரத் திட்டம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளமாட்டோம் என்பதே எனது கருத்தாகும்.

கேள்வி: ஆனால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் மதிப்பீட்டு அறிக்கையை நீங்கள் பெற்றிருக்கவில்லை என அரசாங்கம் கூறுகிறது. சீன நிறுவனத்திற்கு நீங்கள் நில இறையாண்மையை வழங்கியுள்ளீர்கள். உங்களது அரசாங்கத்தாலும் துறைமுக அதிகாரசபையாலும் இழைக்கப்பட்ட பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பாகக் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீங்கள் என்ன கூறவிரும்புகிறீர்கள்?

பதில்: இக்குற்றச்சாட்டுக்களை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். சீன அதிபர் இங்கு வந்தபோது இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தார். இதனை நீங்கள் மதிக்கவேண்டும். நாளை திரு.மோடி இங்கு வந்து சில திட்டங்களை ஆரம்பித்துவைப்பார். அடுத்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது மோடியால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை அனுமதிக்க முடியாது எனக் கூறமுடியாது. இதனை எங்களால் செய்ய முடியாது. இது சீனாவாக, இந்தியாவாக அல்லது அமெரிக்காவாக இருந்தாலும் இக்கோட்பாடு பிழையானது. இது சீன ஆதரவுச் செயற்பாடு என்பதை நான் மறுக்கிறேன்.

கேள்வி: தற்போது தங்களது குடும்பத்திற்கு எதிராக சில வழக்குகள் உள்ளன. உங்களது சகோதரரின் கடவுச்சீட்டு அபகரிக்கப்பட்டுள்ளது, உங்களது மகன் மீது விசாரணை மேற்கொள்ளப்படுகிறது, ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நீங்கள் கவலைப்படுகிறீர்களா?

பதில்: இது ஒரு சித்திரவதை மட்டுமே. எனது மகனுக்கு எதிரான வழக்கை அவர்கள் பின்வாங்க வேண்டியிருந்தது. என்மீது ஏதாவது குற்றம் சுமத்தப்பட்டால் அவர்கள் என்னை நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியும். எனது சகோதரனுக்கு எதிரான வழக்கானது கடற்படையுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துடன் தொடர்புபட்ட சட்ட விவகாரமாகும். அவர் எனது சகோதரன் என்பதை மறந்துவிடுங்கள். அவர் பாதுகாப்புச் செயலர் என்ற அதிகாரத்துடனேயே இதனைச் செய்திருந்தார்.  இதுபோன்று ஒவ்வொரு தீர்மானமும் விசாரணைக்கு உட்படுத்தப்படுமா?

கேள்வி: நீங்கள் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்க முடியும். ஆனால் போர்க் குற்றச்சாட்டுக்கள் மிக மோசமான குற்றங்களாகும். போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தில் அதிபர் சிறிசேன ஒப்புதலளித்துள்ளார்.

பதில்: அவர்களால் செய்ய முடியும். போர் இடம்பெற்ற போது பிரதம இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு நான் மிகத் தெளிவாகவே அறிவுரைகளை வழங்கியிருந்தேன். அதாவது எந்தவொரு பொதுமகனும் இறக்கக்கூடாது என நான் கூறியிருந்தேன்.

கேள்வி: இருப்பினும் போரில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரக்கணக்கானோர் காணாமற்போயுள்ளனர். ஆனால் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பதில்: அவர்கள் இதனை ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை. நாங்கள் சில விசாரணைகளை மேற்கொண்டோம். இதற்காக நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கினோம்.

கேள்வி: ஆனால் நீங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை……

பதில்: அமைச்சு இதனைச் செய்தபோது நாங்கள் அதனைக் கண்காணித்தோம். ஆனால் சில பரிந்துரைகளை நிறைவேற்ற முடியவில்லை. எடுத்துக்காட்டாக, இரண்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட வேண்டும் என்கின்ற பரிந்துரையை நான் ஏற்கவில்லை. இதற்கு என்னால் எதுவும் செய்யமுடியாது என நான் கூறினேன்.

கேள்வி: நீங்கள் எப்போதும் குடும்ப உறுப்பினர்களால் சூழப்பட்ட ஆட்சியை நடாத்தியதாகவும், உங்களது குடும்பத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் உங்களது சகோதரர்கள், உங்களது மகன் என எல்லோரும் ஆட்சிப் பொறுப்பிலிருந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பதில்: அதில் என்ன? எனது மகன் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டார். 1931லிருந்து ராஜபக்சாக்கள் அரசியல் வாழ்வில் ஈடுபடுகின்றனர். சிலவேளைகளில் ராஜபக்சாக்கள் எவரும் ஆட்சியில் இல்லாத சந்தர்ப்பங்களும் இருந்துள்ளன. 1977ல், தேர்தலில் நான் மிக மோசமாகத் தோல்வியுற்றேன். இதன் காரணத்தாலேயே நான் பிறிதொரு சவாலுக்காகக் காத்திருப்பதில் மகிழ்வடைகிறேன். இதற்கு நான் பழக்கப்பட்டவன்.

கேள்வி:  உங்களது அரசியல் செயற்பாடுகள் தொடர்பாகப் பார்க்கும் போது நீங்கள் மக்களைச் சந்திக்கிறீர்கள். உங்களது பெயரில் இரண்டு கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அரசியல்வாதிகளின் ஒரு தொகுதியினர் நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என கோருகின்றனர். பிறிதொரு மோதலுக்கு நீங்கள் தயாராக உள்ளீர்களா?

பதில்: இன்னமும் இல்லை. தேர்தலில் தோற்பதற்கு முன்னர் பல தலைவர்களை நான் பார்த்துள்ளேன். ஆனால் நான் தேர்தலில் தோல்வியுற்ற இந்தத் தடவை எவ்வளவு மக்கள் என்னைப் பார்ப்பதற்காக வருகிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இவர்கள் நான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் எனக் கேட்கிறார்கள். காலையில் எனது வீட்டிற்கு நீங்கள் வந்தால் இதனைப் பார்க்க முடியும். நான் எனது எதிர்கால அரசியற் திட்டம் தொடர்பாக இன்னமும் தீர்மானிக்கவில்லை.

கேள்வி: நீங்கள் தீர்மானம் இயற்றுவதற்கு என்ன தேவை?

பதில்: நான் எனது கட்சியை அதிபர் சிறிசேனவுக்கு வழங்கிவிட்டேன். அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பார்க்கிறேன். அவர்கள் எனது கட்சி உறுப்பினர்களை தொந்தரவு செய்கிறார்கள். நாங்கள் வேலை வாய்ப்பு வழங்கிய அனைத்து மக்களையும் அவர்கள் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். இதுவே எனக்கு ஆதரவான மக்களை கிளர்ந்தெழச் செய்துள்ளது. அவர்கள் இதனைச் செய்யாவிட்டால், நான் இந்த அரசாங்கத்திற்கு எனது ஆதரவை வழங்கியிருப்பேன். ஆனால் தற்போது அவர்கள் எம்மீது விசாரணை மேற்கொண்டு எம்மை சிறையில் அடைக்க விரும்புகிறார்கள். எமது கடவுச்சீட்டுக்களை அபகரித்துள்ளனர். இவர்கள் எவ்வித சாட்சியங்களையும் கொண்டிருக்கவில்லை. இந்நிலையில் நான் எவ்வாறு ஓய்வெடுக்க முடியும்? நான் ஓய்வுபெறுவேன் என நான் ஒருபோதும் கூறவில்லை. தற்போது நான் ஓய்வெடுக்கிறேன்.

கேள்வி: நீங்கள் ஆட்சிக்கு மீண்டும் வந்திருந்தால் வித்தியாசமாக எதனைச் செய்திருப்பீர்கள்?

பதில்: இவ்விரு மாதங்களிலும் எனது பத்து ஆண்டுகால ஆட்சியில் நான் இழைத்த பல தவறுகளை உணர்ந்துள்ளேன். முன்னரை விட மேலும் நல்ல விடயங்களைச் செய்திருப்பேன். நாங்கள் செய்த வேலைகளை மக்கள் மெச்சாதிருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் தற்போது எம்மைப் பாராட்டுகிறார்கள் என நான் நினைக்கிறேன். ஏனெனில் தற்போது எந்தவொரு அபிவிருத்தியும் இடம்பெறவில்லை. எல்லாம் தடைப்பட்டுள்ளது.

கேள்வி: இதுவரை அபிவிருத்தி தொடர்பாகக் கூறினீர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் தொடர்பாகக் கூறுவீர்களா? இந்த விடயம் இந்தியாவின் உணர்வுகளைத் தொட்டிருந்தது. இப்போரை நீங்கள் வித்தியாசமாக மேற்கொண்டீர்களா?

பதில்: இல்லை. நான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்கள் நடாத்த முயற்சித்தேன். நான் உங்களது இடத்திற்கு வந்து பேச்சுக்களை நடாத்துவேன் என புலிகளிடம் கூறியிருந்தேன். ஆனால் நான் போரை நடாத்திச் செல்ல வேண்டியேற்பட்டது. முன்னர் நாங்கள் ஆரம்பித்ததை என்னால் நிறுத்த முடியவில்லை. இது கடந்த காலத்தில் பயனளிக்கவில்லை. நான் பயங்கரவாதிக்கு எதிராகப் போரிட்டேன். உலகிலேயே மிகவும் கொடுமை மிக்க, தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடாத்திய ஆபத்து மிக்க பயங்கரவாதிக்கு எதிராகப் போரிட்டேன். இல்லாவிட்டால் நாங்கள் ஒவ்வொரு நாளும் தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்திருக்கும்.

கேள்வி: போர்க்குற்றங்கள் ஒரு ஒழுங்குமுறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?

பதில்: இக்குற்றங்களை யார் இழைத்தார்கள் என்பதை நாங்கள் கண்டறியவேண்டும். போர்க் காலத்தில் அல்ல. போர் முடிவடைந்த பின்னர் இது தொடர்பாக ஆராய்ந்து நாங்கள் சில நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.

கேள்வி: ஆகவே நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வித்தியாசமாக ஏதாவது செய்வீர்களா என நான் மீண்டும் கேட்கிறேன்?

பதில்: இது இடம்பெற்றால் அதுவரை நாங்கள் காத்திருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *