மேலும்

ஊழலை ஒழிக்க சீனாவின் பொருளாதாரத் தலையீட்டை குறைக்க வேண்டியுள்ளது – சிறிலங்கா

sri-chinaசிறிலங்காவில் ஊழலை ஒழிப்பதற்காக சீனாவின் பொருளாதாரத் தலையீடுகளை குறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

“ஊழலை ஒழிப்பதற்காக, சீனாவின் பொருளாதாரத் தலையீட்டைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல.

சீனா எமக்கு 0.5 வீத வட்டிக்கு கடன்களைத் தந்தால், நாம் அதனை அன்புடன் ஏற்றுக்கொள்வோம். ஆனால், 8 வீத வட்டிக்கு கடன் பெற முடியாது.

இரண்டு மூன்று குடும்பங்களின் உறுப்பினர்களின் தனிப்பட்ட சட்டைப் பைக்குள் 4 தொடக்கம் 5 வீத வட்டிப்பணம் சென்றுள்ளது.

ராஜபக்ச குடும்பம் நாட்டைக் கொள்ளையடித்து விட்டது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சீனாவின் திட்டங்களுக்கு ஏற்பட்ட செலவினம், ஜப்பானிய முதலீட்டில் மேற்கொள்ளப்பட்டதை விடவும், மூன்று மடங்கு அதிகமாக இருந்தது என்று கொள்கைத் திட்டமிடல் பிரதி அமைச்சர்  ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தியாவினால் நிர்மாணிக்கப்பட்ட தொடருந்துப் பாதை அமைப்புக்காக செலவிடப்பட்ட தொகையை விட சீனாவினால் அமைக்கப்பட்ட தொடருந்துப் பாதைக்காக, நான்கு மடங்கு அதிக பணம் செலவிடப்பட்டது.

உதாரணமாக சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட கொழும்பில் கடவத்தை – கரவெலப்பட்டிய வீதி அமைப்புக்கு, கி.மீ ஒன்றுக்கு ஏற்பட்ட செலவு, 7.3 மில்லியன் ரூபாவாகும்.

ஆனால், ஜப்பானிய உதவியுடன், கொட்டாவ – கடுவெல வீதியை அமைப்பதற்கு கி.மீ ஒன்றுக்கு ஏற்பட்ட செலவு 2.4 மில்லியன் ரூபாவேயாகும்.

1.3 பில்லியன் டொலர் செலவில் அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட துறைமுகமும், 300 மில்லியன் டொலர் செலவில் மத்தளவில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையமும் பயனற்றவை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பயணத்தின் போது, 1.2 பில்லியன் டொலர் திட்டங்களுக்கு ராஜபக்ச அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது.

எனினும், மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் சீனாவின் முதலீட்டில், மேற்கொள்ளப்படவிருந்த வடக்கு தேசிய நெடுஞ்சாலை திட்டம், 1.5 பில்லியன் டொலர் செலவிலான கொழும்பு துறைமுக நகரத் திட்டம் என்பனவற்றை மீளாய்வு செய்ய முடிவு செய்துள்ளது.

காலி முகத்திடலில் நடக்கும் துறைமுக நகர நிர்மாணப்பணி

காலி முகத்திடலில் நடக்கும் துறைமுக நகர நிர்மாணப்பணி

சீனாவின் தொலைத்தொடர்பு கட்டுமான நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவிருந்த கொழும்பு துறைமுக நகர கட்டுமானத் திட்டத்தின் படி, கடல் படுகையில் அமைக்கப்படவுள்ள தரைப்பகுதியின் ஒரு பகுதி சீனாவுக்குச் சொந்தமாகும், மற்றொரு பகுதி சீனாவினால் குத்தகைக்கு பெறப்படும்.

முறையான சுற்றுச்சூழல் மற்றும் மூலோபாய விளைவுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல் இந்த திட்டத்தை முன்னெடுக்க முடியாது என்று புதிய அரசாங்கம் கூறியுள்ளது.

கடல் தொடர்பான சட்டம் அலட்சியம் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கொழும்புத் துறைமுகத்துக்கு வரும் 70 வீதமான கப்பல்கள் இந்தியாவில் இருந்து வரும் நிலையில், துறைமுக நகரத்தை சீனா ஒரு கண்காணிப்பு நிலையமாக பயன்படுத்தலாம் என்று இந்தியா எதிர்ப்புத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இந்த திட்டம் கைவிடப்பட்டால், சீனாவின் பக்கத்தில் பெரும் இழப்பு ஏற்படும் என்று சீன அரசின் நாளிதழான குளோபல் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, மியான்மாரிலும் சீனாவுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *