மேலும்

வடக்கில் இருந்து படைகள் குறைக்கப்படும் – புதுடெல்லியில் மங்கள வாக்குறுதி

mangala-sushmaபுதிய அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் படைக்குறைப்பைச் செய்யும் என்றும்,  போரின் இறுதிக்கட்ட சம்பவங்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணையை நடத்தும் என்றும், புதுடெல்லியில் தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

மூன்று நாள் பயணமாக புதுடெல்லி சென்றிருந்த அவர், நேற்று முன்தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

இதையடுத்து அவர் நேற்றுமுன்தினம் மாலை கொழும்பு திரும்பினார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் இந்தியப் பயணம் பயனுள்ளதாகவும், வெற்றிகரலமானதாகவும் அமைந்தது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

Mangla meets Modi

அதேவேளை, கொழும்பு திரும்புவதற்கு முன்னதாக, புதுடெல்லியில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார் மங்கள சமரவீர. இதன்போது அவர்,

‘’புதிய அரசாங்கம் வடக்கில் இருந்து படைகளைக் குறைக்கும்.

மூன்று பத்தாண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணம் மற்றும் நீதியை வழங்க பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வடக்கை மீளமைப்பது தொடர்பாக உலகெங்கும் பரந்து வாழும் ஒரு மில்லியன் புலம்பெயர் மக்களுடன் விரைவில் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும்.

தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு அதிபர் மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சாதகமான பதிலை அளிக்கும் என நம்புகிறோம்.

வடக்கில் இருந்த இராணுவப் பின்புலம் கொண்ட ஆளுனரான மேஜர் ஜெனரல் சந்திரிசிறி நீக்கப்பட்டு, புதிய ஆளுனராக பாலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளதும், வடக்கிற்கு வெளிநாட்டவர்கள் கட்டுப்பாடு இன்றி பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதும், தேசிய நல்லிணக்கத்தை எட்டுவதற்காக அரசாங்கத்தினால் காட்டப்பட்டுள்ள ஆரம்ப சமிக்ஞைகளாகும்.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரிக்க உள்நாட்டு விசாரணை ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படும்.

போரின் இறுதிக்கட்டத்தில் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக உலக சமூகம் கூறுவது குறித்து. நேர்மையான உள்நாட்டு விசாரணையை நடத்துவது எவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கே இடமில்லை.

பாதிக்கப்பட்டவர்கள், அநியாயம் இழைக்கப்பட்டவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் எமது மக்கள்.

ஒரு பொறுப்புள்ள ஜனநாயக அரசாங்கமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி, நிவாரணம், நட்டஈடு வழங்க முயற்சிக்க வேண்டும். அது எமது கடமை.

போரினால் இடம்பொயர்ந்து இந்தியாவிலும், உலகின் ஏயை இடங்களிலும் அகதிகளாக வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் சிறிலங்காவுக்குத் திரும்பி வரவேண்டும்.

உலகில் எங்கும் இலங்கையர்கள் அகதிகளாக வாழக் கூடாது.

முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் திரும்பி வரலாம். அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது.

அவர்கள் அனைவரும் எமது மக்கள். பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் தமது தாயகத்தை விட்டுச் சென்றள்ளனர்.

பல பத்தாண்டுகளாக தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாம் முயன்றோம். ஆனால் முடியவில்லை.

எமது அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு எல்லா இன மக்களும் வாக்களித்துள்ளனர். இந்தநிலையில் அனைவரும் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும்.

முன்னைய அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட குழுக்களைச் சேர்ந்த பலரை நான் லண்டனில் சந்தித்துள்ளேன். அவர்களைத் தீவிரவாதிகளாக என்னால் நம்ப முடியவில்லை.

அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசியுள்ளது. அவர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.

உண்மையான தேசிய நல்லிணக்கத்தை எட்டுவதற்கு அவர்களின் பங்களிப்பும் உதவியும் அவசியம்.

தேசிய நல்லிணக்கத்துக்கு ஏற்கனவே பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. திம்பு யோசனைகள், மங்கள முனசிங்க திட்டம், சந்திரிகாவின் திட்டம், இன்னும் பல யோசனைகள் உள்ளன.

தேசிய நல்லிணக்கத்தை எட்டுவதற்கு இதுவரை முடியாமல் போனதற்கு அரசியல் விருப்பமின்மையே காரணம். இப்போது அரசியல் விருப்பம் உள்ளது. எனவே தீர்வை எட்டமுடியும் என்று நம்புகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *