மேலும்

அனைத்துலக விசாரணைக்கு எவரையும் கையளிக்கமாட்டோம் – புதிய அரசாங்கம்

rajitha senaratneபோர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக எவரையும், அனைத்துலக சமூகத்திடம் கையளிக்கமாட்டோம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணையில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குற்றவாளியாக காணப்பட்டால், புதிய அரசாங்கம் என்ன செய்யும் என்று பிபிசி சிங்களசேவை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

“போர் ஒன்றின் போது தவறுகள் நடக்கும் என்று சரத் பொன்சேகா கூறியதைக் கேட்டிருக்கிறேன்.

ஆனால், வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் சுடப்பட்டது, சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டது போன்ற- ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்துலக சட்டங்கள் மீறப்பட்டிருந்தால், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

ஏனென்றால், சரணடைந்தவர்களை அவர்கள் கொல்ல முடியாது.

இரண்டாவது உலகப்போரில், பாசிச ஜப்பானியர்களும், ஜேர்மனியர்களும் விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டனரே தவிர, கண்டபடி சுடப்படவில்லை.

எனவே, இதுபோன்று எவரும் கொலைகளை செய்ய முடியாது. அதற்கு உள்ளூர் சட்டங்களும் இருக்கின்றன, அனைத்துலக சட்டங்களும் உள்ளன.

ஆனால், நாங்கள் எவரையும் அனைத்துலக விசாரணைக்காக கையளிக்கமாட்டோம். உள்நாட்டிலேயே விசாரணை நடத்துவோம், தேவையானதை இங்கேயே மேற்கொள்வோம்.

அனைத்துலக சமூகம், புதிய அரசாங்கத்தின் மீது  பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறது, ஏனென்றால் நாம் நல்லாட்சிக்கான  வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறோம்.

நாம் சிறிலங்காவில் சுதந்திரமான விசாரணை ஒன்றை நடத்துவோம் என்று அவர்களுக்கு நாம் கூறுவோம்.

சுதந்திரமான விசாரணையை நடத்தி, கூடிய விரைவில், அதனை நிறைவு செய்து, குற்றவாளிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *