மேலும்

சிறிலங்கா அதிபர் தேர்தல் – பரபரப்பான சூழலில் இன்று பலப்பரீட்சை

mahinda-maithriசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் பரபரப்பான சூழலில் இன்று நடைபெறுகிறது.

இன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்களிப்பு, மாலை 4 மணி வரை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஏமாற்றங்களைத் தவிர்ப்பதற்காக, எல்லா வாக்காளர்களும் காலையிலேயே நேரகாலத்துடன் சென்று வாக்களிக்கும்படி அவர் வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், வாக்களிப்பு நிலைய தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், அங்கீகாரம் பெற்ற முகவர்கள் மற்றும், கண்காணிப்பாளர்கள் தவிர வேறெவரும், வாக்களிப்பு நிலையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

எந்தவொரு அரசியல்வாதியும், அவர் எத்தகைய நிலையில் இருந்தாலும், மெய்க்காவலர்களுடன் வாக்களிப்பு நிலையத்துக்குள் நுழைய முடியாது.

வாக்களிப்பு நிலையத்துக்கள் கைபேசி மற்றும் ஒளிப்படக் கருவிகளுடன் நுழைவதும், படம்பிடிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

செல்லுபடியான அடையாள அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட அடையாள ஆவணங்களை காண்பித்து. வாக்காளர் தனது அடையாளத்தை நிரூபிக்க முடியும்.

இன்றைய தேர்தலில் வாக்களிக்க 15,044,490 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 22 தேர்தல் மாவட்டங்களிலும், 12,314 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தல் பணிகளில் மூன்று இலட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

19 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில், மகிந்த ராஜபக்சவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், கடுமையான போட்டி நிலவுகிறது.

இன்று மாலை 4 மணியளவில் வாக்களிப்பு முடிவுக்கு வந்த பின்னர், நாடு முழுவதிலும், 44 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் நிலையங்களில், வாக்க்கள் எண்ணும்பணி இடம்பெறும்.

அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்கு 303 நிலையங்களும், நேரடியாகப் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 1109 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் பணி மாலை சுமார் 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் ஆரம்பிக்கப்படலாம் என்றும், முதலாவது அஞ்சல் வாக்கு முடிவு நள்ளிரவு வெளியாகும் என்று எதிர்பார்ப்பதாகவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *