மேலும்

சிறிலங்கா தேர்தல் : உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியா மற்றும் சீனா

sri-chinaதற்போது இடம்பெறவுள்ள தேர்தலின் பெறுபேறு எவ்வாறு அமையப்போகிறது என்பது தொடர்பாக சிறிலங்காத் தீவில் தமது செல்வாக்கை அதிகரித்து வரும் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாட்டு அரசாங்கங்களும் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

இவ்வாறு The Diplomat ஊடகத்தில் Nitin A. Gokhale எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்னும் குறைந்தது ஒரு வாரத்தில் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் தனது வாழ்நாளில் இதுவரை காலமும் சந்தித்திராத மிகவும் இறுக்கமான அரசியற் களத்தை எதிர்கொள்ளவுள்ளார்.

தமிழ்ப் புலிகளுக்கு எதிராக 30 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தை 2009ல் முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றுள்ள மகிந்த ராஜபக்ச, இவரது நெருங்கிய சகபாடியான மைத்திரிபால சிறிசேன ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பதற்கு முன்னர் தேர்தலில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மைத்திரிபால சிறிசேன ஆளுங்கட்சியிலிருந்து விலகி எதிரணியின் பொது வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட பின்னர் தற்போது மகிந்த ராஜபக்ச மிகவும் இறுக்கமான ஒரு தேர்தல் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளார்.

தற்போது இடம்பெறவுள்ள தேர்தலின் பெறுபேறு எவ்வாறு அமையப்போகிறது என்பது தொடர்பாக சிறிலங்காத் தீவில் தமது செல்வாக்கை அதிகரித்து வரும் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாட்டு அரசாங்கங்களும் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

சிறிலங்கா மீதான இந்தியாவின் மூலோபாய நலன்கள் முதன்மையான நிலையிலுள்ள அதேவேளையில், இவ்விரு நாடுகளுக்கும் பல நூற்றாண்டுகளாக கலாசார மற்றும் மத சார் உறவுநிலையில் மிகவும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது.

மறுபுறத்தே, அண்மைக்காலமாக சிறிலங்காத் தீவில் மூலோபாய ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் சீனா செல்வாக்குச் செலுத்தி வருகிறது. ராஜபக்சவின் சீன ஆதரவுக் கோட்பாட்டிற்கு சீனா தனது நன்றியை நவின்றுள்ளது.

சிறிசேனவுக்கு ராஜபக்சவுக்கும் இடையிலான போட்டி நிலை மேலும் இறுக்கமடைந்துள்ளதானது நிச்சயமாக சீனாவுக்கு வருத்தத்தையே ஏற்படுத்தும். சிறிலங்காவின் பல்வேறு துறைகளில் சீனா தனது பிரசன்னத்தை அதிகரித்து வருகின்ற நிலையில், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆதரவுடன் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன சீனா ஆதரவுக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளமாட்டார்.

2005 -2012 காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு சீனா 4.8 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இதில் இரண்டு சதவீத நிதி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மீதி 98 சதவீத நிதியும் கடனாகவே வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது, இந்தியாவால் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ள 1.6 பில்லியன் டொலர்களில் மூன்றில் ஒரு பகுதி மானியமாகவே வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சீனா நீண்ட காலக் கடனாக 2.18 பில்லியனை சிறிலங்காவுக்கு வழங்கியுள்ளது. பெருமளவான இந்த நிதி சிறிலங்காவின் வீதிகள், அதிவேக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமானநிலையங்கள், சக்தி ஆலைகள், நீர்ப்பாசனம், நீர் வழங்கல் மற்றும் தொடருந்துப் பாதைகளை அமைப்பதற்காகச் செலவிடப்பட்டுள்ளன.

இத்திட்டங்கள் அனைத்தும் வர்த்தக நோக்கத்தைக் கொண்டதாகும் எனவும் இதனால் சீனாவில் தங்கியிருப்பதை விட சிறிலங்காவுக்கு வேறு தெரிவில்லை எனவும் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நான்காம் கட்ட ஈழப்போரில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா மீது மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளதுடன், எவ்வித உதவிகளையும் சிறிலங்காவுக்கு வழங்கவில்லை எனவும் இதனால் சிறிலங்கா முற்றிலும் சீனாவைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த விவாதமானது முற்றிலும் உண்மையானதல்ல. போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகத் தான் தனித்துவிடப்பட்டு விடுவேனோ என்கின்ற அச்சத்தில் மூழ்கியிருந்த கொழும்பின் விவகாரத்தில் சீனா மிகவும் தந்திரமாகச் செயலாற்றி கடனுதவிகளை வழங்கியுள்ளது.

சீனாவால் வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய கடன்தொகையை ராஜபக்ச அரசாங்கம் மீளச்செலுத்த முடியாத நிலை ஏற்படலாம் என்பதால் மிகப்பெரிய திட்டங்களில் சீனாவையும் பங்காளியாக்குவதற்கான வாய்ப்பை சிறிலங்கா வழங்கியுள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் முதற்கட்டத்திற்கு தேவையான 307மில்லியன் டொலரில் 85 சதவீதத்தை சீனா வழங்கியுள்ளதாகவும், 2012ல் கைச்சாத்திடப்பட்ட இதன் இரண்டாம் கட்ட திட்ட ஒப்பந்தத்திற்கு 810மில்லியன் டொலர்கள் செலவாகும் எனவும் ராஜபக்சவுக்கு எதிரானவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2014 செப்ரெம்பர் மாதத்தில் சீனா அதிபர் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்ட போது சீன நிறுவனம் ஒன்றுக்கு ஏழு துறைமுக கொள்கலன்களில் நான்கை 35 ஆண்டுகாலக் குத்தகைக்கு வழங்குவது உட்பட வழங்கல்-நடவடிக்கை-கைமாற்று உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் 4000 இற்கும் மேற்பட்ட எண்ணெய்க் கப்பல்கள் தமது பயணத்தை மேற்கொள்ளும் உலகின் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் கப்பற் போக்குவரத்துப் பாதையிலிருந்து சில கடல்மைல்கள் தொலைவில் அம்பாந்தோட்டைத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தியை மேற்கொள்ளுமாறு ராஜபக்ச அரசாங்கம் இந்தியாவிடம் கேட்டபோது அதில் இந்தியா தனது ஆர்வத்தைக் காண்பிக்காத போதிலும், கடலிலிருந்து 233 ஹெக்ரேயர் பரப்பளவில் 1.4 பில்லியன் டொலரில் மிகப்பாரிய கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக இந்தியா உண்மையில் கவலைப்பட்டது.

இதில் சீனாவுக்கு 99 ஆண்டுகால குத்தகையில் 88 ஹெக்ரேயர் நிலப்பரப்பு வழங்கப்பட்டுள்ளது. பிறிதொரு 20 ஹெக்ரேயர் நிலப்பரப்பு சீனாவுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. பிறிதொரு வகையில் கூறினால், இத்திட்டத்தின் பங்காளியாக சீனா அல்லது சீன நிறுவனம் இருக்கும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

சிறிலங்காவின் தலைநகரில் கொழும்புத் துறைமுகத்தின் தெற்கு கொள்கலன் நிலையம் சீன நிறுவனம் ஒன்றால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் கட்டுமான-செயற்பாட்டு-கைமாற்றுத் திட்டத்தின் கீழ் 35 ஆண்டுகால உரிமத்தைப் பெற்றுள்ளது. கொழும்பில் தரித்து நின்ற சீன நீர்மூழ்கிக்கப்பல் இக்கொள்கலன் நிலையத்திலேயே தரித்து நின்றது. இதேபோன்று கொழும்பு பிரதான துறைமுகத்தைப் பயன்படுத்தாது சீனாவின் கடற் கப்பலும் முன்னர் தெற்கு கொள்கலன் நிலையத்திலேயே தரித்து நின்றது.

சீனாவுடன் தொடர்புகள் அனைத்தும் வர்த்தகத்தை அடிப்படையாக மட்டுமே கொண்டுள்ளதாகவும் பூகோள-மூலோபாய முக்கியத்துவத்தை நோக்காகக் கொண்டதல்ல எனக் கூறி இந்தியாவுக்கு உத்தரவாதம் வழங்குவதற்கான முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டது.

ஆனால் சிறிலங்காவின் இந்த அறிவிப்பை இ;ந்தியர்கள் எவரும் நம்பவில்லை. கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் பிரசன்னம் அதிகரிப்பது தொடர்பாக இந்தியா ஏன் கவலை கொள்ள வேண்டும்? கொழும்புத் துறைமுகத்தில் இடம்பெறும் வர்த்தக சார் நடவடிக்கைகளின் குறைந்தது 70 சதவீதமானவை இந்தியாவுடன் தொடர்புபட்டதாகும்.

எதுஎவ்வாறிருப்பினும், சீனாவின் 21ம் நூற்றாண்டு புதிய கரையோரப் பட்டுப்பாதைத் திட்டம் மற்றும் இதனைக் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தியுடன் தொடர்புபடுத்துதல் போன்றன இந்தியாவைக் கவலைகொள்ள வைத்துள்ளது.

செப்ரெம்பர் 2014ல் சீன அதிபர் சிறிலங்காவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட போது, மாக்கடல் கண்காணிப்பு, கடல் மற்றும் கரையோர வலய முகாமைத்துவம், கரையோரப் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், கடல்சார் பாதுகாப்பு போன்றவற்றைக் கருத்திற்கொண்டு சீனாவும் சிறிலங்காவும் இணைந்து கரையோர மற்றும் கடல்சார் ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக இவ்விரு நாடுகளும் அறிவித்தன.

இதன்மூலம் சீனா, இந்திய மாக்கடலில் சுதந்திரமாக தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் எனவும் இதன்மூலம் சீனா தென்னிந்தியாவில் தலையீடு செய்வதற்கான நிலை உருவாகலாம் எனவும் இந்திய வல்லுனர்கள் கவலைகொள்கின்றனர்.

சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படும் என்பது நிச்சயமாகும்.

கடந்த பத்தாண்டாக சிறிலங்காவிற்கும் இந்தியாவுக்கும் இடையிலான மூலோபாய இடைவெளி அதிகரித்துள்ள நிலையில் இதனைச் சரிசெய்வதற்கு இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்தியாவின் முன்னைய அரசாங்கம் உள்நாட்டு அரசியல் அழுத்தம் மற்றும் சிறிலங்கா மீதான இந்தியாவின் கோட்பாடு ரீதியான குழப்பம் போன்றவற்றால் சிறிலங்காவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தியிருந்தது. இந்த இடைவெளியை சீனா பயன்படுத்தி சிறிலங்காவில் தனது காலை அகலப்பரப்பியுள்ளது.

சிறிலங்காவில் இறுதிக்கட்ட உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற போது இந்தியா தனது இராணுவ உதவிகளை வழங்க மறுத்த போது சீனா இதனைத் தனது சாதகமாகப் பயன்படுத்தி சிறிலங்காவுக்கு இராணுவ சார் வளங்களை வழங்கியது. சிறிலங்கா இராணுவ மற்றும் விமானப்படையிடம் உள்ள கனரக ஆயுதங்களில் 60 சதவீதமானவை சீனாவால் வழங்கப்பட்டது.

அண்மையில் சீனா, சிறிலங்காவுக்கு போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்களை வழங்கியுள்ளது. இதன்மூலம் சிறிலங்காவின் பாதுகாப்புத் துறையில் சீனா தனது செல்வாக்கை நிலைநிறுத்தியுள்ளது. ஆண்டுதோறும் சிறிலங்காவின் முப்படைகளையும் சேர்ந்த 800 அதிகாரிகள் இந்தியாவின் இராணுவத் தளங்களில் பயிற்சிகளைப் பெறுகின்ற போதிலும், சிறிலங்கா தற்போது சீனாவின் இராணுவ வளங்களில் தங்கியுள்ளமை இந்தியாவை அதிருப்தியடையச் செய்துள்ளது.

எதுஎவ்வாறிருப்பினும், ஜனவரி 08ல் இடம்பெறவுள்ள தேர்தலில் யார் சிறிலங்காவின் அதிபராக வெற்றி பெறப் போகிறார் என்பதைப் பொறுத்து சிறிலங்கா மீதான தனது வெளியுறவுக் கோட்பாட்டை மாற்றியமைக்க முடியும் என இந்தியா காத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *