மேலும்

வங்கிக் கிளைகளின் அடர்த்தியில் வடக்கு மாகாணமே முதலிடம் – சுரண்டப்படும் தமிழர் நிதி

HNBசிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கிற்குப் படையெடுத்த வங்கிகள், கடன்களைக் கொடுத்தும், தமிழர்களின் முதலீடுகளைச் சுரண்டியும் வருவதாக கடந்த ஆண்டுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

இந்தக் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுனர் வெளியிட்டுள்ள மாகாண வங்கிக் கிளைகளின் அடர்த்தி தொடர்பான அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளன.

இது வடக்கு மாகாணத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கள் வங்கிக் கிளைகள் திடீரெனப் பெருகியுள்ளதை வெளிப்படுத்தியிருக்கின்றன.

மேல் மாகாணத்தை விடவும், வடக்கு மாகாணத்திலேயே வங்கிக் கிளைகளின் அடர்த்தி அதிகமாக உள்ளதை இந்தப் புள்ளிவிபரம் உறுதி செய்கிறது.

மேல் மாகாணத்தில், ஒரு இலட்சம் பேருக்கு, 21.18 வீதம் என்றளவில் வங்கிக் கிளைகள் இருக்கின்றன.

ஆனால், வடக்கு மாகாணத்தில், ஒரு இலட்சம் பேருக்கு 21.66 வங்கிக் கிளைகள் இருக்கின்றன.

2008ம் ஆண்டில், ஒரு இலட்சம் பேருக்கு 7.39 வங்கிக் கிளைகள் என்ற நிலையில் ஒன்பதாவது (கடைசி) இடத்தில் இருந்தது வடக்கு மாகாணம்.

bank-branch-density

கிழக்கு மாகாணத்திலும் கூட, வங்கிக் கிளைகள் திடீரென விரிவாக்கப்பட்டுள்ளன.

2008ம் ஆண்டில் ஒரு இலட்சம் பேருக்கு, 8.38 வங்கிக் கிளைகள் என்ற அடிப்படையில் எட்டாவது இடத்தில் இருந்த கிழக்கு மாகாணம், இப்போது ஒரு இலட்சம் பேருக்கு 16.82 வங்கிக் கிளைகள் என்றளவுக்கு விரிவடைந்து, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போர் முடிவுக்கு வந்ததும், தமிழர்களின் சேமிப்புகள் மற்றும், புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து வரும் நிதியைக் குறிவைத்தே அதிகளவிலான வங்கிகள் கிளைகளை அமைத்துள்ளன.

இந்த வங்கிக் கிளைகளின் மூலம், பெருமளவானோர் கடனாளியாக்கப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன.

சிறிலங்காவின் தலைநகரம், அனைத்துலக ஏற்றுமதி இறக்குமதி துறைமுகம், அனைத்துலக விமான நிலையம் மற்றும் பிரதான வர்த்தக கேந்திர நிலையங்கள், சுதந்திர வர்த்தக வலயங்கள், தொழிற்சாலைகள் அமைந்துள்ள மேல் மாகாணத்திலேயே,  வங்கிகளின் அடர்த்தி அவசியமாகும்.

ஆனால், இத்தகைய பொருளாதார முக்கியத்துவம் எதுவும் இல்லாத வடக்கு மாகாணத்தில், வங்கிகளின் அடர்த்தி அதிகளவில் இருப்பதைக் கொண்டே, தமிழர்களின் நிதி எந்தளவுக்கு வங்கிகளால் சுரண்டப்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *