மேலும்

வடக்கில் இருந்து இன்று அலரி மாளிகைக்கு நான்கு தொடருந்துகள்

yarldevyவடக்கில் இருந்து, நான்கு தொடருந்துகளில் 1960 தமிழ்மக்களை அலரி மாளிகைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தமிழீழ வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று 1960 பேருக்கு மீளளிக்கவுள்ளதாக கூறியே இவர்கள் அலரி மாளிகைக்கு கூட்டிச் செல்லப்படவுள்ளனர்.

இன்று காலை கிளிநொச்சி,  வவுனியா தொடருந்து நிலையங்களில் இருந்து, புறப்படும் யாழ்தேவி உள்ளிட்ட நான்கு தொடருந்துகளில் இவர்கள் ஏற்றிச் செல்லப்படவுள்ளனர்.

இவர்களின் பயணத்துக்கான எல்லா வசதிகள், ஏற்பாடுகளையும் சிறிலங்கா இராணுவமே மேற்கொண்டுள்ளது.

காலை 10 மணியளவில், பொல்கஹவலை ரயில் நிலையத்தில் தரித்து நின்ற பின்னர், பிற்பகல்12.30 மணியளவில், நான்கு ரயில்களும், கோட்டே ரயில் நிலையத்தை சென்றடையும்.

நகைகளை மீளப் பெறவுள்ளவர்களுக்கு பயணத்தின் போதான தேநீர் மற்றும் ஏனைய வசதிகளை சிறிலங்கா இராணுவத்தினர் ஒழுங்கு செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

இது அரசியல் நோக்கம் கொண்ட நிகழ்வு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

நகை உரிமையாளர்களை அடையாளம் காண்பதிலும், சிறிலங்கா அதிபருக்கு நேரம் ஒதுக்குவதிலும் ஏற்பட்ட பிரச்சினையால் தான் இந்த நிகழ்வு தாமதமடைந்த்தாகவும் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மைய நாட்களாக பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்களை அழைத்து அலரி மாளிகையில், தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு கட்டமாகவே நகைகளை மீளிப்பதாக கூறி வடக்கில் இருந்து 1960 தமிழ்மக்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

அண்மையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வடக்கிற்குச் சென்றிருந்த போது, நகைகளை மீளளிக்கவுள்ளதாக கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கிளிநொச்சிக் கூட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

எனினும், 25 பேருக்கு மட்டுமே அப்போது நகைகள் மீளளிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *