மேலும்

மலேசியாவில் தஞ்சம் கோரியுள்ள ஈழத்தமிழ் அகதிகளும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும்

Malaysian Tamils protestஅகதி நிலையை உறுதிப்படுத்தும் அட்டைகளை வைத்திருந்த போதிலும் இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என குற்றம் சுமத்தப்பட்டு இந்த ஆண்டில் சிலர் மலேசியாவில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழலானது மலேசியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது.

இவ்வாறு Al Jazeera ஊடகத்தில் கோலாலம்பூரில் இருந்து Kate Mayberry எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவித்தள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஒளிப்படம் : Ethnic Tamils hold placards and banners during a demonstration in Kuala Lumpur [EPA].

தற்போது மலேசியாவில் புகலிடம் கோரியுள்ள சிறிலங்காவைச் சேர்ந்த 41 வயதான மாலா அச்சத்தை மறைக்க முயற்சித்துக் கொண்டு தனது கதையைக் கூறினார். இவரது நடுங்கும் கைகளில் தனது குடும்பத்தவர்கள் சிறிலங்காவின் வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக எவ்வாறான துன்பங்களை அனுபவித்தனர் என்பதை விரிவுபடுத்திய எட்டுப் பக்க முறைப்பாட்டு மனு  ஒன்றை வைத்திருந்தார்.

இந்த மனுவானது ஐ.நா அகதிகளுக்கான உயர் ஆணையாளரிடம் கையளிப்பதற்காகத் தயாரிக்கப்பட்டிருந்தது. தனக்கும் தனது மூன்று பிள்ளைகளுக்கும் ஐ.நா வரையறையின் பிரகாரம் அகதி நிலை வழங்கப்பட வேண்டும் எனவும், இதன்மூலம் தானும் தனது பிள்ளைகளும் உறுதியான வாழ்வை வாழமுடியும் எனவும் மாலா குறிப்பிட்டிருந்தார். “ஒவ்வொரு நாளையும் நான் மிகவும் அச்சத்துடனேயே கழிக்கிறேன்” என மாலா தெரிவித்தார். இங்கு இவரது உண்மையான பெயர் மாற்றப்பட்டுள்ளது.

தற்போது மலேசியாவில் உள்ள 4300 இலங்கைத் தமிழ் அகதிகளில் பெரும்பாலானவர்கள் பல ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்துள்ளனர். 2009ல் சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து மலேசியாவில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களில் பலர் தமது சொந்த நாட்டுக்குச் சென்றபோதிலும், ஏனையோரின் வாழ்வு பாதிப்படைந்துள்ளது.

அகதி நிலையை உறுதிப்படுத்தும் அட்டைகளை வைத்திருந்த போதிலும் இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என குற்றம் சுமத்தப்பட்டு இந்த ஆண்டில் சிலர் மலேசியாவில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழலானது மலேசியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது
.
“இந்த நிலையானது நாங்கள் அனைவரும் வெளிச்சத்தை நோக்கி ஒன்றாகச் சென்றுகொண்டிருந்த போது திடீரென இருட்டில் அகப்பட்டுக் கொண்டுள்ளது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கிறது” என மலேசியாவிலுள்ள சிறிலங்கா தமிழ் அகதிகள் நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினரான றஞ்சினி பாஸ்கரன் தெரிவித்தார். “இந்த நிலையில் மக்கள் எவ்வாறு வாழ முடியும்?” எனவும் இவர் வினவுகிறார்.

மலேசியாவில் அகதிநிலையைத் தீர்மானிப்பதற்குப் பொறுப்பான ஐ.நா அகதிகளுக்கான உயர் ஆணையகத்துடன் மலேசியாவிலுள்ள இலங்கைத் தமிழர்கள் தொடர்புகளைப் பேணுவதற்கு மலேசியாவிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டது. இலங்கைத் தமிழ் அகதிகள் நிறுவனமானது மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரின் புறநகர்ப்பகுதியில் செயற்படுகிறது. இந்நிறுவனமானது மலேசியப் பாடசாலைகளில் அங்குள்ள அகதிகள் கல்வி கற்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கான கல்வியை வழங்குவதுடன், நடைமுறை சார் ஆலோசனைகள், உளவியல் சார் ஆதரவுகளையும் வழங்கி வருகிறது.

கடந்த ஆண்டில் அகதிநிலை கோரி விண்ணப்பிக்கப்பட்டவர்களுள் குறைந்தது 60 பேருக்காவது அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும், ஆனால் மலேசியாவிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான நிறுவனமானது இதனை எதிர்த்து வாதிடுவதாகவும் இவர்களின் அகதிக் கோரிக்கை நியாயமானதே என உறுதியாகக் கூறுவதாகவும் அகதிகளுக்கான சட்டவாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு அகதி நிலை மறுக்கப்பட்டவர்கள் இன்னமும் ஒரேயொரு தடவையே தமது கோரிக்கையை முன்வைப்பதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளதால் இவர்கள் தமது பிரச்சினைகளை மீண்டும் விரிவாக எழுதிக் கையளித்துள்ளனர்.

150,000 வரையான அகதிகளின் பதிவுகளைக் கொண்டுள்ள ஐ.நா அகதிகள் நிறுவனமானது உண்மையில் பாதுகாப்புத் தேவைப்படுபவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு அகதிநிலையை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறியுள்ளது. “இந்த ஆண்டு நாங்கள் மீண்டும் மீண்டும் எடுத்துக்கூறியும் அதனை ஏற்காது அகதிகள் சிலர் அவர்களது நாட்டுக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்” என மலேசியாவுக்கான ஐ.நா அகதிகள் உயர் ஆணையகத்தின் பிரதிநிதி றிச்சார்ட் ரவ்லே தெரிவித்துள்ளார்.

“நாங்கள் சிலரை அவர்களது நாட்டுக்குத் திருப்பியனுப்ப வேண்டாம். இவர்கள் தொடர்பாக ஆராயவேண்டும் என அழுத்தம் திருத்தமாக எடுத்துக்கூறியும் அது பலனளிக்கவில்லை. அகதிகளை அவர்களது சொந்த நாட்டுக்குத் திருப்பியனுப்புவதைத் தடுப்பதற்கு எமக்கென ஒரு வரையறை உள்ளது. அதற்கப்பால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது” என றிச்சார்ட் ரவ்லே குறிப்பிட்டார்.

“எங்களால் முடிந்தவரை இந்த அகதிகளைப் பாதுகாப்பதற்கான பரிந்துரைகளையும் விளக்கத்தையும் நாங்கள் வழங்குகிறோம். ஆனால் மலேசியா போன்ற நாடுகளில் அந்நாடுகளின் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் உரிமை எமக்கில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ்ப் புலிகள் என குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பேர் மே மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இரவு நேரத் தேடுதல் நடவடிக்கையின் போது கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் இருவர் ஐ.நா அகதிகள் அட்டையையும் மூன்றாவது நபர் தனது விண்ணப்பத்திற்கான பெறுபேற்றுக்காகக் காத்திருந்த நிலையிலும் கைதுசெய்யப்பட்டனர். இதில் தலையீடு செய்வதற்கான வாய்ப்பை ஐ.நா அகதிகள் நிறுவனம் கொண்டிருக்கவில்லை.

இந்த மூன்று பேரும் தற்போது சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களால் நிர்வகிக்கப்படும் பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அகதி என அடையாளங் காணப்படுபவர் அவரது சொந்த நாட்டில் உயிர் ஆபத்தைச் சந்திக்கும் நிலையிலிருக்கும் போது அவரைத் திருப்பியனுப்புவதானது மிகவும் மோசமான மீறலாகும் என யோர்க் பல்கலைக்கழகத்தின் பிரயோகிக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான மையத்தின் ஆய்வாளரும் விரிவுரையாளருமான அலைஸ் நா மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.

“உயிர் அச்சுறுத்தலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அகதி நிலை வழங்கியவர்களை நாடு கடத்துவதானது அனைத்துலகச் சட்டத்தின் பிரகாரம் அடிப்படை மீறலாகவே கருதப்படுகிறது. 1951 அகதிகள் சாசனத்தில் கைச்சாத்திட்ட மற்றும் கைச்சாத்திடாத நாடுகள் அனைத்தும் இதனைக் கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளன” என அலைஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உட்பட்ட பல்வேறு நாடுகளின் நம்பகமான புலனாய்வுத் தகவல்களை ஆதாரமாகக் கொண்டே மலேசியாவிலிருந்த புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை சிறிலங்காவுக்கு நாடு கடத்தியதாக அகதிகள் சாசனத்தில் கைச்சாத்திடாத மலேசியா தெரிவித்துள்ளது.

“இவர்களுக்கு ஐ.நா அகதி நிலை வழங்கிய போது இவர்கள் தொடர்பான தகவலை அறிந்திருக்கவில்லை. சில தகவல்கள் குறிப்பாக புலனாய்வு சார் தகவல்கள் அனைத்துத் தரப்பினராலும் அறியப்படுவதில்லை” என மலேசியாவின் உள்விவகார பிரதி அமைச்சர் Wan Junaidi Tuanku Jaafar  சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் மேலும்  நால்வரை யூலை மாதத்தில் மலேசியா கைதுசெய்துள்ளது. 2009லிருந்து இதுவரை கைதுசெய்யப்பட்ட தமிழ்ப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் 14 பேரில் ஏழு பேர் அகதிநிலையை உறுதிப்படுத்தும் அட்டைகளை வைத்திருந்தனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், சிறிலங்காவின் வடக்கில் இன்னமும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். முன்னாள் போர் வலயத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்கின்றனர்.

இறுதிக் கட்ட யுத்தத்தில் பங்குபற்றிய இரு தரப்புக்களாலும் இழைக்கப்பட்ட பல்வேறு போர்க் குற்றங்களை விசாரணை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கமானது ஐ.நா வுக்கு பல்வேறு எதிர்ப்புக்களை வழங்கியது. “சிறிலங்காவில் நிலைமை சாதாரணமாக உள்ளது எனக் கூறமுடியாது” என கொழும்பிலுள்ள சிறிலங்கா தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று இயக்குனர் ஜெகன் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

“சிறிலங்காவின் வடக்கிற்கு வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் பயணிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் சிறிலங்கா இராணுவம் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்குத் திரும்பி வரும் தமிழ் மக்களில் சிலர் ஒரு பிரச்சினையுமின்றி நாட்டிற்குள் பிரவேசிக்கின்றனர். ஆனால் இவர்கள் மீது ஏதாவது சந்தேகம் ஏற்படும் போது இவர்களது கடந்த காலம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு விமான நிலையத்தில் வைத்தே இவர்கள் தடுத்து வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் சிறிலங்காவுக்குத் திரும்பும் தமிழ் மக்கள் எப்போதும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்ற, கைதுசெய்யப்படுகின்ற நிலை காணப்படுகிறது” என ஜெகன் பெரேரா மேலும் கூறியுள்ளார்.

தான் சிறிலங்கா இராணுவத்தால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தனது நேர்காணலில் தெரிவித்த போதிலும் அந்த விடயம் முதலாவது விண்ணப்பத்தில் குறிப்பிடப்படவில்லை எனக்கூறி தனது அகதிநிலைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாலா குறிப்பிட்டார். “எனக்கு என்ன நடந்தது என்பதை முதலில் கூற நான் தயக்கமுற்றேன். ஆனால் எனக்கு வழங்கப்பட்ட உளவள ஆலோசனையின் பின்னர் இது தொடர்பாக என்னால் கூறமுடிந்தது” என்கிறார் மாலா.

தமது அகதி நிலை மறுக்கப்பட்ட போதிலும் பெரும்பாலான தமிழர்கள் தொடர்ந்தும் மலேசியாவில் தங்கியிருப்பதே தமது உயிருக்குப் பாதுகாப்பானது எனக் கருதுகிறார்கள். தாம் தமது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படலாம் என்கின்ற அச்சத்தில் சிறிலங்காத் தமிழர்களான கிறிஸ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் மலேசியாவில் தங்கியுள்ளனர். தாம் தமிழ்ப் புலிகளுடன் செயற்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்திய நிலையிலேயே 2010ல் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இந்நிலையில் தாம் மீண்டும் சிறிலங்காவுக்குத் திருப்பியனுப்பப்படக் கூடாது என இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் இவர்கள் கூறினர்.

“எமது அகதி நிலை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட போது நாம் மிகவும் வேதனைப்பட்டோம். நாங்கள் எமது வாழ்வை நினைத்து அச்சப்பட்டதாலேயே மலேசியாவில் தஞ்சம் புகுந்தோம். நாங்கள் மீண்டும் எமது நாட்டுக்குத் திரும்ப முடியாது. அவ்வாறு செல்வதானது நாங்கள் சாவதற்குச் சமமாகும். அத்துடன் எமது வாழ்வும் முடிந்துவிடும்” என கிறிஸ் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முயற்சித்தவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *