மேலும்

போருக்கு பின்னான சிறிலங்காவில் உச்சம் பெற்றிருக்கும் இனவாதம் மற்றும் பாலியல் கருத்தியல்கள்

Flag-SriLankaபோருக்குப் பின்னான சிறிலங்காவில் இனவாதம்-பாலியல் போன்றன பெண்கள் மற்றும் குழந்தைப் பேறு போன்றவற்றுடன் மட்டும் தொடர்புபட்டிருக்கவில்லை. இதன்மூலம் இன-மத மற்றும் வர்க்க எல்லைகளுக்கிடையில் தொடர்புகளைப் பேணி ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் இனவாதம்-பாலியல் தொடர்பான கருத்துக்கள் தடையாக உள்ளன.

இவ்வாறு openDemocracy இணையத்தளத்தில் Chulani Kodikara* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினக்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

போருக்குப் பிந்திய சிறிலங்காவில் சிங்கள பௌத்த தேசியவாதம் மீண்டும் அதிகரித்துள்ளமையானது பால்நிலை மற்றும் அதன் அடையாளங்கள் தொடர்பில் புதிய வரையறையை வழங்குகிறது.

போருக்குப் பின்னான சிறிலங்காவில் தற்போது மீண்டும் உச்சம் பெற்றுள்ள சிங்கள பௌத்த தேசியவாதத்தின் விளைவாக இங்கு வாழும் பெண்கள் மற்றும் பால்நிலை சமத்துவத்தில் மிகமோசமான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளமை குடும்பம் என்கின்ற முக்கிய தூண் தொடர்பான விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது.

மே 2009ல் சிறிலங்காவின் குருதி தோய்ந்த யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து சிங்கள பௌத்த தேசியவாதம் மீண்டும் துளிர்விடத் தொடங்கியது. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றில் வழங்கிய முதலாவது உரையானது பௌத்த தேசியவாதக் கருத்தியலுக்கான வரையறையை உறுத்திப்படுத்தியது.

“எமது சொற்களஞ்சியத்திலிருந்து சிறுபான்மையினர் என்கின்ற வார்த்தை அகற்றப்பட்டுள்ளது. இந்த நாட்டில் இனிவருங் காலங்களில் தமிழர்கள், முஸ்லீம்கள், பறங்கியர்கள், மலாயர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினர் என்கின்ற பிரிவுகள் காணப்படாது” என அதிபர் மகிந்த ராஜபக்ச தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

எதுஎவ்வாறெனினும், சிறுபான்மையினர் என எவரும் இந்த நாட்டில் இருக்கமாட்டார்கள் என அதிபர் தனது உரையில் குறிப்பிட்ட போதிலும், பெரும்பான்மையினர் என எவரும் இங்கிருக்கமாட்டார்கள் எனக் குறிப்பிடவில்லை. அதிபரின் இக்கருத்தானது போருக்குப் பின்னான தேசிய அடையாள மீள்கட்டுமானத் திட்டத்தின் மைற்கல்லாக அமைந்துள்ளது.

போருக்குப் பின்னான சிறிலங்காவில் சிங்கள பௌத்த தேசியவாதத்தைக் கட்டியெழுப்பும் திட்டத்தின் மூலம் ஒருபுறம் நாட்டில் யுத்த வெற்றி கொண்டாடப்பட்டது. ஆனால் மறுபுறம் இதன்மூலம் நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு தோன்றியது. இப்பாதுகாப்பற்ற நிலையானது இராணுவ ஆதிக்கம் நிலைபெறுவதற்கும், ‘தேசப்பற்றாளர்கள்’ ‘தேசத் துரோகிகள்’ என இருபெரும் பிரிவுகளாக மக்கள் அடையாளங் காணப்படுவதற்குமான வழியைத் தோற்றுவித்தது.

சிறிலங்காவின் மத்திய அரசாங்கத்தால் தேசிய அடையாளம் தொடர்பான மீள்வரையறையானது சிங்கள பௌத்தத்தின் புகழைக் கொண்டாடுவதற்கான வழியைத் தோற்றுவித்தது. அதேவேளையில், சிங்கள பௌத்த தேசியவாதக் கருத்தியல் மற்றும் வரலாற்று ரீதியாகப் பெண்கள் தொடர்பாகப் பேணப்படும் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு பால்நிலை ரீதியான பங்களிப்புக்கள் மற்றும் அடையாளங்களை மீள்வரையறுக்கும் நிலை தோற்றம் பெற்றது.

இந்த உலகைச் சூழவுமுள்ள இன-மத தேசியவாதங்களில், குடும்பம் தொடர்பான கருத்தியலானது ஒரு முக்கிய தூணாகக் காணப்படுகிறது. இந்த வகையில் போருக்குப் பின்னான சிறிலங்காவிலும் மீளவும் தோற்றம் பெற்றுள்ள பௌத்த தேசியவாதக் கருத்தியல்கள் காலாதி காலமாக பின்பற்றப்படும் பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்கள் மீதான எண்ணக்கருக்களில் மிகத் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவில், முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட மற்றும் நவீன தேசியவாதங்களுக்கும், அரசியலில் அதிகாரம் கொண்ட தரப்பினரின் மதம்,கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களுடன் தொடர்புபட்ட தேசியவாதங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளதாக பெண்ணியவாதிகள் கருதுகின்றனர். இரண்டாவதாகக் குறிப்பிட்டுள்ள தேசியவாதங்கள் நிலவும் நாடுகளில் ‘குடும்பம்’ என்பது ஆண் மற்றும் பெண்களுக்கிடையில் பல்வேறு பொறுப்புக்களை பகிர்ந்து கொடுத்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு அடிப்படைக் குறியீடாகக் கருதப்படுகிறது.

இவ்வாறான ஒரு சமூகக் கட்டமைப்பைக் கொண்ட தேசியவாதங்களில், பெண்ணானவள் ‘நல்லதொரு’ மனைவியாகவும் தாயாகவும் சேவையாற்ற வேண்டும் எனவும் பிள்ளைப் பராமரிப்பு, வீட்டுவேலைகளைச் செய்தல் போன்றன பெண்ணின் பொறுப்புக்கள் எனவும் வரையறுக்கப்படுகிறது. இதேவேளையில், இந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் தமது குடும்பங்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவுசெய்ய வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளனர். ஆண்கள் சமூக ரீதியான பொறுப்புக்களை ஏற்று அவற்றை நிறைவேற்ற வேண்டும் எனவும் பெண்கள் தனிப்பட்ட ரீதியான பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் இவ்வகையான தேசியவாதங்கள் ஆண் மற்றும் பெண்ணிற்கிடையில் உரிமை மற்றும் கடப்பாடுகளை வரையறுக்கின்றன.

போருக்குப் பின்னான சிறிலங்காவில் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட தேசியவாதம் நிலவுகிறது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச 2005ல் இடம்பெற்ற தேர்தல் அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “எமது சமூகத்தின் கட்டமைப்பின் பிரகாரம் தாயானவள் ஒரு குடும்பத்தின் ஆரம்ப இடத்தைப் பிடிக்கிறாள். குடும்ப உறவுகள் தமக்குள் நெருக்கத்தையும் ஒற்றுமையையும் அதிகரிப்பதன் மூலம் ஒரு மகிழ்வான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நிலவும் மிகவும் நெருக்கமான நல்லுறவானது பொருளாதார ரீதியில் ஏற்படும் கடினங்கள் மற்றும் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு உதவும் என நான் நம்புகிறேன்” என 2005ல் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டிருந்தார்.

“பெண்ணானவள் தனது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஒரு உறுதியான அடித்தளத்தை இடுகிறாள். பெண்ணொருவர் தனது பிள்ளைகளைப் பராமரித்தல், குடும்பச் செலவுகளை முகாமை செய்தல் மற்றும் குடும்பத்தில் அமைதி நிலவுவதை உறுதிப்படுத்தல் போன்ற பல்வேறு பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காகத் தன்னை அர்ப்பணிக்கிறார்” என சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டிருந்தார். இதே சிறிலங்கா அதிபர் 2010ல் மீண்டும் அதிபராகப் பதவியேற்ற பின்னர் பெண்கள் மற்றும் குடும்பங்களின் பொறுப்புக்களை அரச கோட்பாடுகளுடன் இணைத்து செயற்படுத்த விரும்பினார்.

சிறிலங்காவின் பொருளாதாரமானது வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களால் அனுப்பப்படும் வருவாயில் நீண்ட காலம் தங்கியுள்ளது. 2000ல் வெளிநாடுகளில் பணிபுரிந்த 75 வீதமான சிறிலங்கர்கள் பெண்களாவர். எனினும், திருமணம் செய்த பெண்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவதைக் குறைப்பதானது போருக்குப் பின்னான சிறிலங்காவின் முக்கிய கோட்பாடாகக் காணப்படுகிறது. ஆனால் இது தொடர்பில் இன்னமும் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பெண்கள் குறிப்பாக ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறார்களின் தாய்மார் பணிபுரிவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்வதென்பது சிறிலங்காவில் மிகவும் சவாலானது.

வெளிநாடுகளுக்கு பணிநிமித்தம் செல்லும் பெண்கள் இரண்டு நிபந்தனைகளை நிறைவுசெய்ய வேண்டும் என வெளியுறவு வேலைவாய்ப்பு அமைச்சால் 2013ல் வெளியிடப்பட்ட புதிய சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் தமது குடும்பப் பின்னணி தொடர்பாகவும் சிறார் பராமரிப்புத் தொடர்பாகவும் உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் வெளிநாட்டில் பணிபுரிவதற்கு நாட்டை விட்டுச் செல்வதால் கணவர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இந்த நிபந்தனைகளை எதிர்த்து அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்பட்ட போது சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளாது இதனை நிராகரித்தது. பணிப்பெண்ணாகச் செல்லும் சிறிலங்காப் பெண்கள் வறுமை நிலை மற்றும் கணவன்மாரால் துன்புறுத்தப்படுதல் போன்ற காரணங்களுக்காக மட்டுமன்றி வேறு பல காரணங்களுக்காகவும் இவர்கள் செல்கின்றனர்.

இதேவேளையில், சிறிலங்காவின் உள்நாட்டிலுள்ள பெண் தொழிலாளர்கள் குறிப்பாக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்கள் தொடர்ந்தும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகுகின்றனர். பெண் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பொறிமுறைகள் போதியவில் செயற்படாததாலேயே இந்தப் பெண்கள் உள்நாட்டில் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர், நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டு முறைமை மற்றும் இனப்பெருக்க உரிமை போன்றவற்றில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. செப்ரெம்பர் 2007ல் சிறிலங்கா அரசாங்கமானது அனைத்து கருக்கலைப்பு நிலையங்களையும் மூடின. சிறிலங்காவின்  குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் கருக்கலைப்பானது ஒரு குற்றமாகக் கருதப்பட்டாலும் கூட, கருக்கலைப்பு நிலையங்கள் பல பத்தாண்டுகளாக செயற்பட்டிருந்தன. மருத்துவ ஆலோசனையின் பிரகாரம் அவசர கருக்கலைப்புச் செய்யும் நிறுவனங்கள் கூட மூடப்பட்டன.

இதற்கும் மேலாக, தீவிர பௌத்த தேசியவாதிகளால் ஒழுங்குபடுத்தப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டு முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து குழந்தைப் பிறப்பைத் தடுப்பதற்கான நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டு முறைமை அனைத்தையும் நிறுத்துமாறு மார்ச் 2013ல், சுகாதார அமைச்சால் அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளுக்கும் சுற்றுநிருபம் அனுப்பப்பட்டது.

இதேவேளையில், அரச சார்பற்ற நிறுவனங்கள், கருத்தடைகளுக்குப் பயன்படுத்தும் பொருட்களை வழங்குவதும் தடைசெய்யப்பட்டது. சிங்கள பௌத்த தேசியவாதமானது அதிகரித்திருந்த 1950களில் சிறிலங்காவில் நிலவிய குடும்பக் கட்டுப்பாட்டுக் கோட்பாட்டுடன் ஒப்பீடு செய்கையில் தற்போதைய அரசாங்கத்தின் கோட்பாடானது மிகவும் மோசமானது எனக் கூறப்படுகிறது. இது குடும்பக் கட்டுப்பாட்டு முறைமை தொடர்பில் தீவிர பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

போருக்குப் பின்னான சிறிலங்காவில் குடும்பக் கட்டுப்பாட்டு முறையால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் மிகவும் மோசமானதாகும். ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட சிறார்களைக் கொண்ட சிங்கள பௌத்த குடும்பங்களுக்கு அன்பளிப்பு வழங்கப்பட வேண்டும் என சில புத்த பிக்குகள் கோரியுள்ளனர். மூன்றாவது பிள்ளையைப் பெறும் இராணுவ அல்லது காவற்துறைக் குடும்பங்களுக்கு 100,000 ரூபா பணத்தை சிறிலங்கா அரசாங்கம் வழங்கிவருகிறது. சிறிலங்கா இராணுவம் மற்றும் காவற்துறையில் சிங்களவர்களே அதிகம் காணப்படுகின்றனர். சிறிலங்கா அரசாங்கமானது இத்தகைய நடவடிக்கை மூலம் நாட்டில் சிங்கள பெரும்பான்மை சமூகத்தை மேலும் விரிவுபடுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது.

இதேவேளையில், சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லீம் பெண்கள் குழந்தைகளைப் பெறுவதில் தடைகள் விதிக்கப்படுகின்றதா என்கின்ற அச்சம் நிலவுகிறது. கிளிநொச்சியில் வாழும் சில பெண்களுக்கு அவர்களுக்குத் தெரியாமல் கருத்தடை செய்யப்பட்டதாக அண்மையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.  முஸ்லீம் பெண்கள் அதிகம் குழந்தைகளைப் பெறுவதானது சிங்கள சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது. இதுவே முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகம் இடம்பெறுவதற்கான காரணமாகும்.

போருக்குப் பின்னான சிறிலங்காவில் இனவாதம்-பாலியல் போன்றன பெண்கள் மற்றும் குழந்தைப் பேறு போன்றவற்றுடன் மட்டும் தொடர்புபட்டிருக்கவில்லை. இதன்மூலம் இன-மத மற்றும் வர்க்க எல்லைகளுக்கிடையில் தொடர்புகளைப் பேணி ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் இனவாதம்-பாலியல் தொடர்பான கருத்துக்கள் தடையாக உள்ளன.

சிங்கள பௌத்த இனவாத தேசியவாதம், இராணுவ மயமாக்கல், ஜனநாயகம் மற்றும் சட்ட ஆட்சி குழிதோண்டிப் புதைக்கப்பட்டமை, நவீனதாராளவவாதம் போன்றன ஒன்றாகச் சேர்வதன் மூலம் சிறிலங்காவில் ஒரு அடக்குமுறை அரசு மற்றும் அரசியல் சார் பொருளாதாரக் கட்டமைப்புக்கள் கையோங்குவதற்கான வழியேற்பட்டுள்ளது. இது அதிகாரம் மிக்க ஆட்சிக்கு வழிகோலுகிறது.

தேசியவாதக் கருத்தியலுக்கு உட்பட்ட பால்நிலை என்பது சிறிலங்காவுக்கு புதிதல்ல. 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் நடைமுறையில் காணப்பட்ட கொலனித்துவத்திற்கு எதிராக வரையப்பட்ட சிங்கள பௌத்த தேசியவாதக் கருத்தியலானது எப்போதும் ‘நல்லதொரு சிங்கள பௌத்த பெண்’ என்கின்ற எண்ணத்தையே தோற்றுவிக்கின்றது என பெண்ணியவாதியான குமாரி ஜெயவர்த்தன சுட்டிக்காட்டுகிறார்.

சிறிலங்கா சுதந்திரமடைந்ததன் பின்னர் நாட்டில் பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களின் நலன்களில் அக்கறை காண்பித்தல் போன்றன நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஆனால் எமது வரலாற்றில் நாம் முதன்முறையாக, சிறிலங்கா அரசின் இனவாதம் மற்றும் பாலியல் ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *