மகிந்தவிடம் போர்க்குற்ற விசாரணை நடத்த சிறிலங்கா அரசாங்கம் இணங்காதாம்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்த சிறிலங்கா அரசாங்கம் இணங்காது என்று, சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர், ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது நிகழ்ந்த மீறல்கள் தொடர்பாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க, ஒரு உள்நாட்டு விசாரணை நடத்தப்படும் என்பதே சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம், போரில் பாதிக்கப்பட்டவர்கள், நேரில் கண்ட சாட்சிகளிடம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில், ஒரு அறிக்கையைத் தயாரித்துள்ளது.
இந்த அறிக்கையின் பிரதி ஒன்று அடுத்த மாதம் சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த அறிக்கையில், அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தாலோ, குற்றம்சாட்டப்பட்டவர்களை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்த பரிந்துரைக்கப்பட்டிருந்தாலோ அதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்காது.
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும், அனைத்துலகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உள்நாட்டு விசாரணையை நடத்துவதே, அரசாங்கத்தின் நிலைப்பாடு” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.