சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைகள் புறக்கணிப்பு
சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மேல் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என, ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்.
“சட்டத்தின்படி, ஒரு நிறுவனம் எங்களது பரிந்துரைகளைச் செயற்படுத்தத் தவறினால், அது குறித்து நாங்கள் சிறிலங்கா அதிபருக்கு ஒரு அறிக்கையின் மூலம் தெரிவிக்க வேண்டும்.
அதன்பின், அவர் அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்; அங்கு அது குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
சட்டப்படி எங்களால் செய்யக்கூடியது இதுதான். நாங்கள் இவ்வாறான பல அறிக்கைகளைச் சமர்ப்பித்திருக்கிறோம், ஆனால் இதுவரை அவற்றில் எது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
எங்களது பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, ஆணைக்குழுவுக்கு வலுவான அதிகாரங்களை வழங்கும் வகையில், 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என கோரியுள்ளோம்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்ட ஒருவர் முன்னிலையாகத் தவறினால், அவரை நீதிமன்ற அவமதிப்பு செய்தவராகக் கருதி, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இந்தச் சட்டத்தின் கீழ் எங்களுக்கு உண்டு.
எங்களது பரிந்துரைகளைச் செயல்படுத்தத் தவறும் நிறுவனங்கள் மீதும் இதேபோன்ற நடவடிக்கையை எடுக்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு நாங்கள் கோரியுள்ளோம்.
இருப்பினும், எங்களது முன்மொழிவுகள் எதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்.
