மேலும்

40 ஈரானிய மாலுமிகளை மீட்டு தெஹ்ரானுக்கு அனுப்பியது சிறிலங்கா

காலிக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சிக்கியுள்ள வணிகக் கப்பல்களில் இருந்த 40 ஈரானிய மாலுமிகள், சிறிலங்கா கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டு ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுக்காலை 40 ஈரானிய மாலுமிகளும் சிறிலங்கா கடற்படையின் இரண்டு படகுகள் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டு, கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், இன்று காலை  ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா வெளிவிவிகார அமைச்சர் விஜித ஹேரத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

காலி கடற்கரையிலிருந்து சுமார் 24 கடல் மைல் தொலைவில் இருந்த வணிகக் கப்பல்களில் இருந்த இந்த மாலுமிகள், உடல்நலக் குறைபாடுகள் காரணமாக உதவி கோரியிருந்தனர்.

கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகம் இந்த மீட்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்தது. சிறிலங்கா  அதிகாரிகள், காலி துறைமுகம் வழியாக இந்த மாலுமிகளை கரைக்குக் கொண்டு வருவதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த மீட்பு நடவடிக்கைக்கு வசதி செய்துகொடுத்ததன் மூலம், சிறிலங்கா தனது மனிதாபிமானக் கடமைகளை நிறைவேற்றியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ ஏஎவ்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“நாங்கள் இந்த இடமாற்றத்தை ஒருங்கிணைத்து, எங்களது மனிதாபிமானக் கடமைகளைச் செய்துள்ளோம்” என்று கூறிய ரோட்ரிகோ, இந்த நடவடிக்கைகளுக்கான செலவுகளை ஈரான் தூதரகமே ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

சிறிலங்கா கடல் எல்லைக்கு அருகில் ஈரானிய வணிகக் கப்பல்கள் தொடர்ந்து நிலை கொண்டுள்ள சூழலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் முற்றுகை மற்றும் தடைகள் காரணமாக, இந்தக் கப்பல்களால் தங்கள் சொந்த நாட்டுத் துறைமுகங்களுக்குத் திரும்ப முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த எண்ணெய் தாங்கி கப்பல்கள், சிறிலங்காவின் 12 கடல் மைல், பிராந்திய எல்லைக்கு அப்பால், அனைத்துலக கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளதாக சிறிலங்கா  அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கப்பல்களைக் கண்காணிப்பதற்காக, உளவு விமானங்களும் கடற்படை ரோந்துப் படகுகளும் பணியமர்த்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *