மேலும்

அனுரவின் பயணம் குறித்து தவறான தகவல் – விசாரணை ஆரம்பம்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் ஜெர்மனிக்கான பயணம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப முயன்றதாக கூறப்படும் நபர்கள் குறித்து, விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு பிரதம நீதிவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா அதிபரின் மேலதிக செயலாளர் ஜி. சுபாஷ் சமிந்த ரோஷன் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் தனது ஜெர்மன் பயணத்தின் போது விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் ஒருவரைச் சந்தித்ததாக, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஊடக சந்திப்பின் போது பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

இந்த அறிக்கை பல்வேறு ஊடகங்கள் மற்றும் இணையங்களில் பரவலாகப் பரப்பப்பட்டது.

சிறிலங்கா அதிபரை அவமதிக்கும் மற்றும் அரசாங்கத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், இந்தக் கருத்து வெளியிடப்பட்டதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களின் சமர்ப்பணங்களை  மதிப்பாய்வு செய்த பின்னர், விசாரணையின் முன்னேற்றத்தை தாமதமின்றி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதம நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *