சந்திரிகாவிடம் சரணடையும் மைத்திரி- கட்சியை பொறுப்பேற்க அழைப்பு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பொறுப்பேற்று, மீண்டும் அதனைக் கட்டியெழுப்புமாறு, கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அதிபருமான, சந்திரிகா குமாரதுங்கவிடம், முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
1994 ஆம் ஆண்டு முதல் 2005 ஆண்டு வரை சிறிலங்கா அதிபராக, பணியாற்றிய சந்திரிகா குமாரதுங்கவிடம், இருந்து சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை மகிந்த ராஜபக்ச பெற்றுக் கொண்டிருந்தார்.
அதன் பின்னர் கட்சித் தலைவர் பதவி மைத்திரிபால சிறிசேனவிடம் சென்றது.
சந்திரிகா குமாரதுங்கவின் ஆசியுடன் தலைவர் பதவியைப் பெற்றுக் கொண்ட மைத்திரிபால சிறிசேன, தனது பாதையை மாற்றிக் கொண்டதை அடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அவர் வகிப்பதற்கு எதிராக, சந்திரிகா வழக்குகளை தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்குகளை விலக்கிக்கொள்ளுமாறு சந்திரிகா குமாரதுங்கவிடம், மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது சட்ட பிரச்சினைகளில் சிக்கியுள்ளதுடன், மைத்திரிபால சிறிசேனவின் கட்சித் தலைவர் பதவி சவாலுக்கு உள்ளாகியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன இனி கட்சியின் தலைவர் பதவியில் நீடிக்கத் தயாராக இல்லாததால், அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விலக்கிக் கொள்ள சந்திரிகா குமாரதுங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், தேர்தல் ஆணையத்திடம் உள்ள ஆவணங்களில்இன்னமும் மைத்திரிபால சிறிசேனவே தலைவராக குறிப்பிடப்பட்டுள்ளார்.