கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு நாளை பலப்பரீட்சை
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கான பலப்பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.
கடந்தமாதம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில், அறுதிப் பெரும்பான்மையை பெறுவதற்கான 59 ஆசனங்களை எந்தவொரு கட்சியும் பெறவில்லை.
48 உறுப்பினர்களை கொண்ட தேசிய மக்கள் சக்திக்கு மேலதிகமாக 11 ஆசனங்கள் தேவைப்படுகின்றன.
அதேவேளை 29 ஆசனங்களைக் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி, 13 ஆசனங்களை கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, 5 ஆசனங்களைக் கொண்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன, 1 ஆசனத்தைக் கொண்டுள்ள பொதுஜன முன்னணி, 4 ஆசனங்களைக் கொண்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன ஒரே அணியாக இருக்கின்றன.
எனினும், இந்த அணி மேலும் 7 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டிய நிலையில் உள்ளன.
சுயேட்சைக் குழுக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு இரண்டு தரப்புகளும் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி தாம் பெரும்பான்மைக்கு மேலதிகமாக ஆசனங்களை பெற்று விட்டதாக கூறுகிறது.
63 உறுப்பினர்களின் ஆதரவை தேசிய மக்கள் சக்தி பெற்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியும் தாங்களே ஆட்சியமைப்போம் என்று கூறுகிறது.
இவ்வாறான நிலையில் நாளை காலை 9.30 மணிக்கு கொழும்பு மாநகர முதல்வர் தெரிவில் கடும் பலப்பரீட்சை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.