ஐரோப்பாவுக்கான விமானப் பயண செலவு அதிகரிப்பு- சிறிலங்கன் நிறுவனம் கவலை
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்ற நிலையினால், ஐரோப்பாவுக்கான சிறிலங்காவின் விமானப் பயணச் செலவினம் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
போர் நடக்கும் பகுதிகளைத் தவிர்ப்பதற்காக லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கான வான் வழித்தடங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் சிறிலங்கன் விமான நிறுவனம் உள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பின்னர், ஈரான் உட்பட மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சில பகுதிகளின் வான்வெளி மூடப்பட்டுள்ளது.
இதனால், பிராங்போர்ட், பாரிஸ் மற்றும் லண்டனுக்கான சிறிலங்கன் விமானங்கள் மத்திய கிழக்கு பிராந்தியங்கள் வழியாகச் செல்லும் குறுகிய தூரத்தைப் பயன்படுத்த முடியாது என, சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏனைய வழித்தடங்களைப் பயன்படுத்தினால், மாற்றப்பட்ட பாதைகளில் பறப்பதற்கு போதுமான எரிபொருள் காவுதிறன் இல்லாததால், எரிபொருள் நிரப்புவதற்காக ஏதேனும் ஒரு விமான நிலையத்தில் நிறுத்த வேண்டியிருக்கும். என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பயண வழித்தட மாற்றங்கள் காரணமாக நேற்று லண்டனில் இருந்து கொழும்புக்கு பயணித்த UL504 விமானத்தின் விமானப் பயண நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் நிரப்புவதற்காக விமானம் டோஹாவிற்கு திருப்பி விடப்படுவதாகவும் சிறிலங்கன் விமான நிறுவனம் தெரிவித்திருந்தது.
குறித்த வான்வெளியைத் தவிர்க்க கொழும்பிலிருந்து பாரிஸ் செல்லும் UL501 விமானமும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.
தாக்குதலுக்குப் பின்னர் உலகளாவிய எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பும், சிறிலங்கன் விமான நிறுவனத்திற்கு பலத்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்கன் விமான நிறுவனம் லண்டனுக்கு தினமும் விமான சேவையை நடத்துவதுடன், பிராங்போர்ட் மற்றும் பாரிசுக்கு வாரத்தில் மூன்று விமானங்களையும் இயக்குகிறது.
விமானப் பயண நேர அதிகரிப்பு, அதிக செலவினம், எரிபொருள் விலை அதிகரிப்பு போன்றவற்றினால் விமானக் கட்டணங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இது சிறிலங்காவின் சுற்றுலாத்துறையின் இலக்குகளுக்கு சவாலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.