புதைக்கப்பட்ட இடங்களை காட்ட முடியாதென்றாராம் சோமரத்ன ராஜபக்ச
விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் செம்மணிக்கு கொண்டு வரப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அவர்களைப் புதைத்த இடத்தை காண்பிக்க முடியாதெனவும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் யாழ். நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் லெனின்குமார் தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனைக் கூறியுள்ளனர்.
நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைவாக மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளங் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறப்பட்டதா என குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளிடம் நீதிவான் எஸ்.லெனின்குமார் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த குற்றப் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள், சிறையில் உள்ள சோமரத்ன ராஜபக்சவிடம் வாக்குமூலத்தைப் பெறப்பட்டுள்ளது.
அந்த வாக்குமூலத்தில்,1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மணி சோதனைச்சாவடியில் தான் பணியாற்றியதாகவும், அப்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் சிலர் அங்கு கொண்டுவரப்பட்டு கொல்லப்பட்டனர் என்றும், அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் காண்பிக்க முடியாது என்றும் கூறியதாகவும், குறிப்பிட்டனர்.
இதன்போது குறுக்கிட்ட சட்டவாளர் எம்.ஏ.சுமந்திரன், சோமரத்ன ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் பெறப்பட்ட வாக்குமூலம் தொடர்பாக, கடந்த முதலாம் நாள் ‘வீரகேசரி’ நாளிதழில் வெளியான செய்தியின் உள்ளடக்கத்துக்கும் சோமரத்ன ராஜபக்ச கூறியதாக குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் மன்றில் முன்வைத்துள்ள விடயங்களுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
அதேவேளை இந்த அமர்வில், கனடாவில் வசித்துவரும் அருட்தந்தை அல்போன்ஸ் ஐ.பேர்னாட் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டவாளர் மரியதாஸ் யூட் டினேஷ், தனது கட்சிக்காரரான, அருட்தந்தை பேர்னாட் செம்மணி மனிதப்புதைகுழி பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்திருப்பதாகவும், அந்த தகவல்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டு, அவர் சார்பில் சத்தியக்கடதாசியை மன்றில் தாக்கல் செய்திருப்பதாகவும் அறிவித்தார்.
அவரது வாதத்தை செவிமடுத்த நீதிவான், செம்மணி-சித்துபாத்தி மனிதப்புதைகுழி தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் அந்த தகவல்களை வழங்கமுடியும் என்றும், அதற்கமைய அருட்தந்தை பேர்னாட் செம்மணி மனிதப்புதைகுழி குறித்து அவர் அறிந்த விடயங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வழங்கலாம் என்று அறிவித்தார்.
