அடக்குமுறைச் சட்டங்களை மீளப்பெற வலியுறுத்தி கூட்டுப் பிரகடனம் கைச்சாத்து
பயங்கரவாதத் தடைச் சட்டம், பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை முழுமையாக மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தி சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கூட்டு பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இவற்றைத் திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும், அவற்றை முழுமையாக மீளப்பெறப்படாவிட்டால் பரந்த மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை மன்றக் கல்லூரியில் ‘அரச பயங்கரவாத சட்டங்களை கிழித்தெறிவோம்!’ என்ற தொனிப்பொருளில் நேற்று நடைபெற்ற நிகழ்விலேயே இந்தக் கூட்டு பிரகடனம் கைச்சாத்திடப்பட்டது.
மக்கள் போராட்ட இயக்கம், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம், முன்னிலை சோசலிசக் கட்சி, மாற்றத்துக்கான இளைஞர் அமைப்பு, ஒருங்கிணைந்த ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், சம உரிமை இயக்கம் உள்ளிட்ட வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் பிரகடனத்தில் கைச்சாத்திட்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய, மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த முதலிகே,
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, சிறிலங்காவை அடிக்கடி ஒரு ‘இருண்ட அரசு’ என்று வர்ணிக்கிறார். அந்த கூற்றை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
சிறிலங்கா உண்மையிலேயே ஒரு ‘இருண்ட அரசு’தான்; இங்கே பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், கடத்தப்பட்டுள்ளனர் மற்றும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இந்த ‘இருண்ட அரசை’ ஒழித்து, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக வாக்குறுதி அளித்தே ‘தேசிய மக்கள் சக்தி’ அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
ஆனால், தற்போது சிறிலங்கா அதிபர், இந்த ‘இருண்ட அரசின்’ அதிகாரங்களை மேலும் பலப்படுத்தும் சட்டங்களைக் கொண்டு வரத் தயாராகி வருகிறார்.
முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டங்கள், சந்தேக நபர்களை 72 மணிநேரம் வரை தடுத்து வைக்கும் அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்குகின்றன.
ஹோமகம காவல் நிலையத்தின் சிறையறையில், வெறும் ஆறு மணிநேரத்திற்குள் இஷாரா என்பவர் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதை நாம் பார்த்தோம்.
அதேபோல், நிமேஷ் என்பவர் வெலிக்கடை காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட மூன்று மணிநேரத்திற்குள்ளேயே கொல்லப்பட்டார்.
இத்தகைய காவல்துறைக்குத் தான், சந்தேக நபர்களை 72 மணிநேரம் தடுத்து வைக்கும் அதிகாரத்தை வழங்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிடுகிறதா?
இப்போது, இந்தச் சட்டங்கள் குறித்து நாங்கள் கவலைகளை எழுப்பும்போது, சிறிய சலுகைகளை வழங்கி எங்களை அமைதிப்படுத்த சிறிலங்கா அதிபர் முயல்கிறார்.
தடுப்புக்காவல் காலத்தை 72 மணிநேரத்திலிருந்து 48 மணிநேரமாகக் குறைப்பதாகக் கூறி, இந்தச் சட்டங்களை நிறைவேற்ற அனுமதிக்குமாறு அவர் கேட்கிறார்.
இந்தச் சட்டங்களில் நீங்கள் திருத்தங்களைக் கொண்டு வந்தாலும், தீய சக்தி தீய சக்தியாகவேதான் இருக்கும்.
நீங்கள் வெறும் தீய சக்தியை, இன்னும் கவர்ச்சிகரமான ஒரு வேடமிட்டு அறிமுகப்படுத்த முயல்கிறீர்கள்.
எனவே, இத்தகைய சிறிய சலுகைகளை வழங்குவதை நிறுத்திவிட்டு, ஒடுக்குமுறை கொண்ட இந்தச் சட்டம் மற்றும் சட்டமூலங்களை முழுமையாகத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
அரசாங்கம் இதற்கு மறுப்பு தெரிவித்தால், இந்தச் சட்டங்களை ஒழிப்பதற்காக, மக்கள் போராட்டத்தின் ஊடாக ஒரு பரந்த மக்கள் சக்தியை உருவாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நீங்கள் கொண்டுவர முயற்சிக்கும் இந்த ஒடுக்குமுறைச் சட்டங்களைக் கண்டு நாங்கள் அஞ்சவில்லை.” என்றும் தெரிவித்தார்.







