மேலும்

பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கை – யாழ். நீதிமன்றம் முக்கிய தீர்மானம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துபாத்தி மனிதப்புதைகுழி தொடர்பாக பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் சமர்ப்பிக்கப்பட்ட சுருக்க அறிக்கையின் அடிப்படையிலேயே தொடர்ந்து  செயற்பட வேண்டும் என நீதிமன்றம் கருதவில்லை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் அறிவித்துள்ளார்.

செம்மணி-சித்துபாத்தி மனிதப்புதைகுழி வழக்கில்  முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய,  நேற்று பி.ப 2.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வு இடம்பெற்றது.

இதில், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உள்ளடங்கலாக, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் மூத்த சட்டவாளர்களான கே.எஸ்.இரத்னவேல்,  எம்.ஏ.சுமந்திரன், வி.எஸ்.நிரஞ்சன், ஞா.ரணித்தா, மரியதாஸ் யூட் டினேஷ், கலாநிதி கு.குருபரன், எஸ்.மணிவண்ணன், க.சுகாஷ், தி.டிலக்சனா, பெனிஸ்லஸ் துஷான் மற்றும் ஜெ.நிஷாந்தன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாமும், அரச தரப்பின் சார்பில் சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன், காணாமல்போனோருக்கான  பணியகத்தின் உறுப்பினர் மிராக் ரஹீம் மற்றும் குற்றப்புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அமர்வின் தொடக்கத்தில் பாதிக்கப்பட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் சார்பில் தனது சமர்ப்பணங்களை முன்வைத்த  மூத்த சட்டவாளர் கே.எஸ்.இரத்னவேல், பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கைக்கு எதிரான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து தனது சமர்ப்பணங்களை முன்வைத்த அவர்,

‘பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் செம்மணி-சித்துபாத்தி மனிதப்புதைகுழி தொடர்பில் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவதாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் உள்ள விடயங்களுக்கும், கடந்த ஒக்டோபர் மாதம் 19 ஆம் நாள், 4ஆவதாக சமர்ப்பிக்கப்பட்ட சுருக்க அறிக்கையின் உள்ளடக்கங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

அவ்வறிக்கையின் உள்ளடக்கங்கள் முன்னைய அறிக்கைகளின் உள்ளடக்கங்களில் இருந்து வேறுபடுவதற்கு ஏதுவான போதிய காரணங்களும் ஆதாரங்களும் குறிப்பிடப்படவில்லை.

மிகப்பிரதானமாக முதல் மூன்று அறிக்கைகளிலும் செம்மணி சித்துபாத்தியை ‘மனிதப்புதைகுழி’ என அடையாளப்படுத்தியிருந்த பேராசிரியர் ராஜ் சோமதேவ, அதற்குரிய நியாயப்பாடுகளையும் முன்வைத்திருந்தார்.

குறிப்பாக கடந்த ஆண்டு ஜுன் மாதம் 6 ஆம் நாள் பேராசிரியரால் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கையில், செம்மணி சித்துபாத்தியில் குற்றச்செயல்கள், மனித உரிமை மீறல்கள் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிப்பதற்கான நியாயமான பின்னணி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தமையை அடுத்து, நீதிமன்றினால் அப்பகுதி குற்றப்பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.

அதேபோன்று நிலத்திலிருந்து 5 அடிக்கும் குறைவான ஆழத்தில் உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதும், கண்டறியப்பட்ட எலும்புகளின் அமைவும் வழமைக்கு முற்றிலும் மாறான ஒரு தன்மையைக் காண்பிப்பதாகவும், மனித எலும்புக்கூடுகளுடன் ஆடைகள் கண்டறியப்படாமை கவனிக்கத்தக்கது எனவும் பேராசிரியரின் முன்னைய அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும் இந்த அனைத்து விடயங்கள் உள்ளடங்கலாக, ‘மனிதப் புதைகுழி’ என்ற சொற்பதம் கடந்த ஒக்டோபர் 19 ஆம் நாள் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்வாங்கப்படவில்லை.

அதுமாத்திரமன்றி செம்மணி சித்துபாத்தியில் கண்டறியப்பட்ட உடல்கள் இயற்கை அனர்த்தத்தினாலோ அல்லது ஏதேனும் தொற்றுநோயினாலோ உயிரிழந்தவர்களுடைய உடல்களாகவும் இருக்கலாம் என்ற விடயம் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால், அவற்றுக்கான ஆதாரங்களை சுகாதார அமைச்சு உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளமுடியும்.

இருப்பினும் அந்த அறிக்கையின் முறையான ஆதாரங்கள், சான்றுகள் எவையும் உள்ளடக்கப்படவில்லை.

அதேபோன்று 1995 களில் இந்தப் பகுதி முழுவதும் இராணுவக்கட்டுப்பாட்டின் கீழேயே இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இருப்பினும் அதுபற்றிய எந்தவொரு விடயமும் இந்த அறிக்கையில் உள்வாங்கப்படவில்லை.

இவையனைத்தும் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட சுருக்க அறிக்கையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. எனவே அந்த அறிக்கையை நாம் முற்றாக ஆட்சேபிக்கிறோம்’ எனக் குறிப்பிட்டார்.

அதையடுத்து, தனது சமர்ப்பணங்களை முன்வைத்த மூத்த சட்டவாளர் எம்.ஏ.சுமந்திரன்,  சட்டவாளர் கே.எஸ்.இரத்னவேல் முன்வைத்த விடயங்களுடன் இணங்குவதாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து விடயங்களை முன்வைத்த அவர், ‘செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் 1920 ஆம் ஆண்டின் பின்னரான நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இருப்பினும் வரலாற்றுச் சான்றுகளின் பிரகாரம் இறுதியாக 1919 ‘ஸ்பானிஷ் ப்ளு’ என அறியப்பட்ட அம்மை நோய் பரவி பெருமளவானோர் உயிரிழந்தனர். அதன் பின்னரான காலப்பகுதியில் அவ்வாறான சம்பவங்கள் பதிவானதாக சான்றுகள் இல்லை.

அதேபோன்று கண்டறியப்பட்ட எலும்புகளின் சீரற்ற தன்மை என்பன குறித்து முன்னைய அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு விளக்கமளிப்பது போலவே 4 ஆவது சுருக்க அறிக்கை அமைந்திருக்கிறது. எனவே அவ்வறிக்கை முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்.

அதேவேளை இதுவரை 580 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள போதிலும், இதுவரை ஒரு எலும்புக்கூட்டைக் கூட அது யாருடையது என்று அடையாளங் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மரபணு பரிசோதனையை மேற்கொள்வதன் ஊடாகவே அதனைச் செய்யமுடியும். இந்தப் பரிசோதனைகள் அனைத்துலககட்டமைப்புக்களின் ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.

எனினும், அவற்றை உள்நாட்டில் செய்வதாக இருந்தாலும், முழுமையான சர்வதேச மேற்பார்வை இன்றியமையாததாகும்.

அதுமாத்திரமன்றி தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ள அகழ்வுப்பணிகளும் அனைத்துலக மேற்பார்வையுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்தச் செயன்முறையில் சிறிலங்கா பாதுகாப்புத்தரப்பினர் எந்த வகையிலும் உள்வாங்கப்படக் கூடாது.

மேலும், செம்மணி-சித்துபாத்தி மனிதப்புதைகுழியுடன் தொடர்புபட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படும் காலப்பகுதியில், செம்மணியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட மூவரின் பெற்றோர், தற்போது சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் கண்டறியப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் தொடர்பில் மரபணு பரிசோதனையை மேற்கொள்வதற்கு அவர்களது மரபணு மாதிரிகளை வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டு சத்தியக்கடதாசி வழங்கியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பெற்றோரின் பாதுகாப்புசார் கரிசனைகளைக் கருத்திற் கொண்டு இந்த இரு சத்தியக்கடதாசிகளும் மன்றின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட வேண்டும்.

அதேவேளை, எலும்புக்கூடுகள் பற்றிய கார்பன் நாளிடல் பரிசோதனை முன்னெடுக்கப்படுவதை  மறுதலிக்கவில்லை.  இருப்பினும் அந்த முடிவுகளின் நிச்சயத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடிய மரபணு பரிசோதனைகளும் அதற்குச் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம்.

மேலும் மன்னார் மனிதப்புதைகுழி மற்றும் மாத்தளை மனிதப்புதைகுழி என்பவற்றைப் பொறுத்தமட்டில் கார்பன் நாளிடல் பரிசோதனையின் பின்னரே அந்த அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டன.

ஆகையினாலேயே கார்பன் நாளிடல் பரிசோனைக்கு சமாந்தரமாக மரபணு பரிசோதனையையும் கோருவதாகக் குறிப்பிட்டார்.

மன்றில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிவான் எஸ்.லெனின்குமார், ‘பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் அறிக்கைகளின் உள்ளடக்கங்களுக்கும் நான்காவது அறிக்கையின் உள்ளடக்கத்துக்கும் இடையில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுவதாக மன்றின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

எது எவ்வாறிருப்பினும் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் அவரது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது அகழ்வுப்பணிகள் தொடர்பான அவரது அவதானிப்பு மற்றும் கருத்தாகவே அமைந்திருக்கிறது.

எனவே அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே செயற்படவேண்டும் என மன்று கருதவில்லை’ எனக் குறிப்பிட்டார்.

மேலும் காபன் நாளிடல் பரிசோதனைக்கு அப்பால் அனைத்துலக ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நடைமுறையில் உள்ள வேறு பரிசோதனை முறைகள் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறும், காபன் நாளிடல் பரிசோதனையை மேற்கொள்ளக்கூடிய அனைத்துலக நிறுவனங்கள் நான்கைப் பெயரிடுமாறும் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகளுக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

அத்தோடு இதுவரை கண்டறியப்பட்டுள்ள எலும்புக்கூடுகளில் வயது வந்தவர்களுடையது எனக் கருதத்தக்க எலும்புக்கூடுகள் தொடர்பான என்புமாதிரி பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட குழாமுக்கு ஒப்புதல் அளித்த நீதிவான், பரிசோதனை மேற்கொள்ளப்படும் நாள் மன்றுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும், பரிசோதனையின்போது பாதிக்கப்பட்ட தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளின் பிரசன்னம் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் சம்பந்தப்பட்ட தரப்புக்களால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் தொடர்ந்து அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பது குறித்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த அமர்வில் ஆராயப்படும் என்றும் நீதிவான் எஸ்.லெனின்குமார் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *