மேலும்

எயர் பஸ் ஊழல் வழக்கில் நாமலை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் உத்தரவு

சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயர் பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற ஊழல்  குறித்த வழக்கில், நாமல் ராஜபக்சவை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம  நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி மீது கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேக நபராக அறிவிக்குமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு  சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக அரச சார்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கபில சந்திரசேன பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம், நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டதைக் காட்டும் தகவல்கள் விசாரணையில் வெளிப்பட்ட பின்னர், இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து, இந்த வழக்கில் ராஜபக்சவை சந்தேக நபராக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய விமானக் கொள்வனவு உடன்பாடு  தொடர்பாக 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ரூ. 100 மில்லியன் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால், நாமல் ராஜபக்ச செப்ரெம்பர் 4 ஆம் நாள்  கைது செய்யப்பட்டு,  செப்ரெம்பர் 18 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *