போதைப்பொருள் வலையமைப்பே சிறிலங்காவின் பிரதான பாதுகாப்பு அச்சுறுத்தல்
சிறிலங்காவில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் தஞ்சம் புகுந்த பின்னர், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை திருப்பி அனுப்புவதற்கு சிறிலங்கா அதிபர் இந்தியாவின் ஆதரவை கோரியுள்ளார்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சிறிலங்கா பயணத்தின் போது நடைபெற்ற சந்திப்பில், சிறிலங்கா அதிபர் இந்தக் கோரிக்கையை அவரிடம் விடுத்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவின் தேசியப் பாதுகாப்பு குறித்த கவலைகள் பற்றி இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.
போதைப்பொருள் வர்த்தகமே நாட்டின் தற்போதைய மிகக் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்ட சிறிலங்கா அதிபர், போதைப்பொருள் வர்த்தகத்தின் அளவும், அது எல்லை தாண்டி நடைபெறும் தன்மையும் ஒரு ஒருங்கிணைந்த பிராந்திய நடவடிக்கையை அவசியமாக்குகிறது என்றும், வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் தேசிய எல்லைகளைக் கடந்து அதிகளவில் செயற்படுவதாலும், இந்தியப் பெருங்கடலை ஒரு கடத்தல் பாதையாகப் பயன்படுத்துவதாலும் இது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் போதைப்பொருள் கடத்தலுக்கான ஒரு முக்கிய மையமாக மாறிவருகிறது என்று அவர் சுட்டிக்காட்டியதோடு, இந்த அச்சுறுத்தலை ஒழிக்க இரு நாடுகளுக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு தேவை என்பதையும் வலியுறுத்தினார்.
பாக்கு நீரிணையை கடந்து தப்பிச் சென்ற குற்றவாளிகளைத் தண்டிப்பதில் இந்தியாவுடன் ஒத்துழைப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
சிறிலங்கா கடற்பரப்பிற்குள் இந்திய மீன்பிடிக் கப்பல்கள் மீண்டும் மீண்டும் அத்துமீறி நுழைவதையும், சிறிலங்காவின் கடல் வளங்களைச் சுரண்டிவரும் அழிவுகரமான மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்த இந்தியாவின் தலையீட்டையும் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கோரியுள்ளார்.
