பேரிடர் சவால்களை சமாளிக்க முழு ஆதரவு – சீனா உறுதி
சிறிலங்கா மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், பேரிடர் சவால்களை சமாளிக்க சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும், சீனா முழு ஆதரவை வழங்கும் என அறிவித்துள்ளது.
சீனாவின், தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் வாங் டோங்மிங், இன்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அதிபர் அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சிறிலங்கா விரைவாக மீண்டெழும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என, அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகள் இன்று காலை அதிபர் செயலகத்தில், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்திருந்தனர்.
இதன்போது, சிறிலங்கா எதிர்கொள்ளும் கடுமையான பேரழிவு குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த வாங் டோங்மிங், சீன அரசாங்கமும் சீன மக்களும் இந்த நிலைமை குறித்து மிகவும் வருத்தமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க சீனா ஆரம்பத்தில் இருந்தே உடனடியாக செயற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால பொருளாதார, கலாசார மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே, தனது இந்தப் பயணத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடினமான காலகட்டத்தில் சிறிலங்காவுக்கு வருகை தந்ததற்காக வாங் டோங்மிங், மற்றும் அவருடன் வந்த குழுவினருக்கு சிறிலங்கா அதிபர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பொருள் மற்றும் நிதி உதவி உட்பட சீனா வழங்கிய ஆதரவுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.
கடுமையாக சேதமடைந்த தொடருந்ர் வலையமைப்பை மீட்டெடுப்பதற்கும் புனரமைப்பதற்கும், தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு சீன அரசாங்கத்திடமும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடமும் சிறிலங்காவின் சார்பில் கோரிக்கை முன்வைப்பதாக, சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளப் பாதுகாப்புக் குழுவின் தலைவரான லு சின்ஷே (Lu Xinshe) , வெளியுறவுக் குழுவின் துணைத் தலைவரும் தேசிய மக்கள் காங்கிரஸின் சீன-சிறிலங்கா நட்புறவுக் குழுவின் துணைத் தலைவருமான வாங் கே (Wang Ke) , சமூக மேம்பாட்டு விவகாரக் குழுவின் துணைத் தலைவர் டான் ரியான்ஷிங் (Tan TianXing) , தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் பொது அலுவலகத்தின் வெளியுறவுப் பணியகத்தின் துணை பணிப்பாளர் நாயகம் டாங் ஜியான் ( Tang Jian), வெளியுறவு அமைச்சின் ஆசிய விவகாரத் துறையின் ஆலோசகர் யாங் யின் (Yang Yin), வெளியுறவு அமைச்சின் ஆசிய விவகாரத் துறையின் மூன்றாவது செயலாளர் ஷா லோங் (Sha Long) மற்றும் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, அதிபரின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க மற்றும் அதிபரின் மூத்த மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

