மைத்திரிபால சிறிசேனவிடம் 5 மணி நேரம் விசாரணை
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நேற்று 5 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன்இணைந்த ஒரு நிறுவனத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு சம்பவம் தொடர்பாக, அவரிடம் விசாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுக்காலை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகிய மைத்திரிபால சிறிசேன, சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர், பிற்பகல் 2:00 மணியளவில் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடம்பெற்றதாக கூறப்படும் மோசடியின் சரியான தன்மை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், அவர் நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்க முன்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்புடைய அமைப்பின் நிதி பரிவர்த்தனை அல்லது முடிவு சம்பந்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
விசாரணையின் முன்னேற்றம் குறித்து ஆணைக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.