மார்ச்சில் மாகாண சபைத் தேர்தல் – என்பிபி அரசு, ஜேவிபி திடீர் முடிவு
மாகாண சபைத் தேர்தல்கள் பெரும்பாலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இருந்த நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.
தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி.பிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில், மாகாண சபைத் தேர்தல்கள் உடனடியாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும், அடுத்த சிங்கள- தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்னர் அவை நடத்தப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த மார்ச் மாதத்தில் தேர்தல்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட காலமாக தாமதமாகி வந்த மாகாண சபைத் தேர்தலை மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள திடீர் முடிவின் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன.
அரசாங்கம் குறித்த விமர்சனங்கள் இருந்தாலும், அரசாங்கத்தை விட எதிர்க்கட்சிக்கு அதிக நற்பெயர் கிட்டவில்லை என்பது அரசாங்கத்தின் மதிப்பீடு. இது முதலாவது காரணம்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியால் முன்வைக்கப்பட்ட திட்டங்களின்படி, அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அரசாங்கம் மிகவும் சிக்கலான, கடுமையான முடிவுகளை செயற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என்பது இரண்டாவது காரணம்.
குறிப்பாக, அரசாங்கம் பல அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கவும், சிலவற்றை மூடவும், அரசு செலவினங்களை வெகுவாகக் குறைக்கவும் கட்டாயப்படுத்தப்படும்.
இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்துவது தவிர்க்க முடியாமல் இருக்கும் என்பதுடன், மக்கள் மத்தியில் கடும் எர்ப்பையும் தூண்டும் என்று அரசாங்கம் நம்புகிறது.
எனவே, சிங்கள- தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி, ஏதாவது ஒரு வகையில் வெற்றியைப் பெற்று, பின்னர் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி நிலைமைகளின் கீழ் தேவைப்படும் கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.